17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஜனநாயகத் திருவிழா- 2026

ஜனநாயகத் திருவிழா- 2026

எழுதியவர்: Askar February 15, 2026, 8:19 am

ஜனநாயகத் திருவிழா- 2026

( தோரணம் -08 )

காயடிக்கப்பட்ட அறிவு ஜீவிகள்!
காயம் பட்ட தமிழ் சமூகம்!

// தமிழ் என் உயிர் மூச்சு //
// ஆனால், அதனை பிறர் மீது விட மாட்டேன் // -என அன்றைய நவீன சிற்றிதழ் கவிஞர் *ஞானக் கூத்தன்* எழுதிக் களிப்புற்றார்.

யார் மூச்சை ? யார் மீது விட்டார்கள் ? – அவர்கள் விட்ட அதிகார மூச்சினால், எத்தனை ஆயிரம் தமிழ்நாட்டு இளங் குருத்துக்களின் உயிர்கள் இங்கே பறித்து வீசப்பட்டன- என்பதை நாடே அறியும். இருந்தும் அன்றைய மொழிப் போராட்டத்தை “அவர்கள்” ஒரே ஒரு கவிதை வரிகளில் கடந்து சென்று, அந்த ஓராயிரம் உயிர் தியாகத்தையும் கொச்சைப் படுத்தி மகிழ்ந்தார்கள். இருந்தும், நம்ம ஊர் “ஜோல்னாப் பையர்”- கள் அந்த அக்ரஹாரத்து மேட்டிமை வரிகளை கேட்டு கை தட்டி மகிழ்ந்தார்கள். நவீன கவிதைகளின் படிம அடுக்குகளில் பதுங்கிக் கொண்டு மண் சார்ந்த சிந்தனைகளை காலப் பொருத்தமற்ற. சிந்தனையாகச் சித்தரித்து மகிழ்ந்தார்கள். மேலும், திராவிட எழுத்துக்கள் என்பது பிரச்சார நெடி கொண்ட பிதற்றல்கள்- என உரத்துக் கூறிக் கொண்டு, தங்களை “நடுநிலையாளர்கள்” -என காட்டிக் கொண்டார்கள்.

இந்த நடுநிலையாளர்கள் பின்னே ஒரு கூட்டம்….

இன்னொரு பக்கம், தன்னை சோஷலிஸ படைப்பாளியாக அறிவித்துக் கொண்ட சிந்தனைச் சிற்பி ஜெயகாந்தன் அவர்கள், போர் குணமிக்க திராவிட இலக்கியத்தையும், போராட்டம் மிகுந்த திராவிட அரசியலையும் தமிழ் சமூகத்தின் நச்சுக் கிருமிகளாக சித்தரித்து மகிழ்ந்தார்.

இவர் பின்னே இன்னொரு கூட்டம்….

துக்ளக் நடத்திய நையாண்டி தர்பாரின் பின்னே மற்றொரு கூட்டம்….

என, இங்குள்ள தமிழ் சிந்தனை மரபில் விஷமமான கருத்துக்கள் “வேர்கோஸிஸ்”- பச்சை நரம்பு போல இழையோடி நின்றன. இதனால், திராவிட இயக்க சிந்தனைகளும், அரசியலும், கோரிக்கைகளும், போராட்டங்களும்- வெகு மக்களிடமிருந்து திட்டமிட்டே தனிமை படுத்தப்பட்டன. மேலும், திராவிட அரசியல் என்பது வெறும் சினிமா கவர்ச்சி. இந்த சினிமா கவர்ச்சியை வைத்தே குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்து விட்டார்கள். ஆட்சி நிர்வாகம் தெரியாத லும்பன்கள். நாட்டுக்காக தியாகம் செய்த தலைவர்களை தோற்கடித்த உதிரிகள் – என்ற சித்திரத்தை பொது வெளியில் வடித்து வைத்தனர். இந்த அறமற்ற போக்குகளை இங்குள்ள எந்த சமூக ஆய்வாளர்களும், கல்வியாளர்களும், சமூக செயல் பாட்டாளர்களும், அறிவு ஜீவிகளும் எதிர்த்து கேள்வி எழுப்பவில்லை. திராவிடத்தின் மீதான இந்த வீண் அவதூறுகளை ஆய்ந்தறிந்து உண்மைகளைச் சொல்லவில்லை.

எதிர் தரப்பினரின் ஊடக லாபியும், இலக்கிய மேட்டிமையும், கருத்துருவாக்க பண்ணைகளும் நமது புத்தி ஜீவிகளை எட்ட நின்று எச்சரித்துக் கொண்டிருந்தன. எனவே, திராவிட இயக்க அரசியல் பணிகள் இங்கே தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டன.

குறிப்பாக, 1938- ஆம் ஆண்டில் தனித் தமிழ் இயக்கம் நடத்திய இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் பற்றியும், அதனை வெகு மக்கள் மத்தியில் கொண்டு சென்ற சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் பெரியார் பற்றியும், பிறகு, 1964-65- ஆம் ஆண்டுகளில் உக்கிரம் அடைந்த இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் மற்றும் மாணவர் போராட்டம் பற்றியும், அதன் அவசியங்கள் பற்றியும் எடுத்துப் பேசுவதற்க்கு இங்கு யாரும் முன் வரவில்லை.

இன்னும் சற்று விரிவாகச் சொல்வதென்றால்….

நமது தமிழ் மொழி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் பற்றியும், மொழித் திணிப்பின் வழியாகவே நம்மை அதிகாரமற்ற மக்களாக மாற்றத் துடிக்கும் வடவர்களின் செயல் திட்டம் பற்றியும், அவர்களின் அதிகாரமிக்க மொழிக் கொள்கை பற்றியும் துளியும் அறிந்திடாத சமூகமாக இந்த தமிழ் சமூகத்தை மாற்றுவதற்காக, அதில் உள்ள சிந்தனையாளர்களை இப்படி வசமாக மடக்கிப் பிடித்து காயடித்து வைத்தார்கள்.

ஆனால், சுட்டெரிக்கும் வெய்யிலை தன் தலையில் தாங்கிக் கொண்டு தனக்குக் கீழே பெரு நிழல் பரப்பி நிற்கும் ஆல மரம் போன்று,….

அறிஞர் அண்ணாவின் தலைமையில் அமைந்திட்ட திராவிட அமைச்சரவை மின்னல் வேகத்தில் செயல் படத் தொடங்கியது.

குறிப்பாக, மாப்பிள்ளையும் நாங்கள் தான். தமிழர்களாகிய நாங்கள் அணிந்திருக்கும் மேல் “கோட்”-டும் எங்களுடையது தான் என உரத்துக் கூறிய படியே,……..

டெல்லி செங்கோட்டையிடம் பேசுவதற்க்கு இந்தியாவின் பொது மொழியான ஆங்கில மொழியையும், ஜார்ஜ் கோட்டையில் தங்களுக்குள் பேசிக் கொள்ள தமிழ் மொழியையும் -பற்றிப் பிடித்து, தமிழ் நாட்டில் இரு மொழிக் கொள்கையை சட்டமாக இயற்றியது. இதன் மூலம், தமிழ் நாட்டின் ஒட்டு மொத்த வாழ்வாதாரங்களில் நிகழ இருந்த மிகப் பெரிய “மரபணு விபத்து”- ஐ ஓடிப் போய் தடுத்து நிறுத்தியது.

என்ன சொன்னீர்கள் ?

ஆம் நண்பர்களே !

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மீதும் அதிகாரத்தின் வழியாக திணிக்கப்பட்டு வரும் இந்தி மொழி என்பது ஒரு மிகப் பெரிய “மரபணு விபத்து”- தான்.

அதற்கான தரவுகளுடன்…

ஷரீப். அஸ்கர் அலி,
வண்ணப்பலகை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!