ஜனநாயத் திருவிழா-2026
( தோரணம் -07 )
அரசியல் வெளியில்:
மறைக்கப்பட்ட கனிகள்!
இந்திய அளவில் 1947- ஆம் ஆண்டிற்குப் பிறகான முதல் மூன்று ஆண்டுகள் மிக முக்கியமான ஆண்டுகள்.
(இது குறித்து பிறகு விரிவாகப் பார்ப்போம்)
போலவே, தமிழ்நாடு அளவில் 1967- ஆம் ஆண்டிற்க்கு முந்தைய மூன்று ஆண்டுகள் மிக, மிக முக்கியமான ஆண்டுகள்.
இந்த இரண்டு வகையான “மூன்று”- ஆண்டுகளுமே இன்று வரை மறைக்கப்பட்ட கனிகளாகவே உள்ளன. இதில், தமிழ்நாட்டுக் கனியை முதலில் பார்ப்போம்.
அன்றைய சென்னை மாநிலத்தில் 1964-65 ஆண்டுகளில் நடந்த மொழிப் போராட்டம், மாணவர்கள் எழுச்சியாக மாறி இந்த மாநிலத்தையே ஒரு யுத்தக் களமாக மாற்றி விட்டிருந்தது. இந்த அடையாள மீட்புப் போராட்டத்தைத் தொடர்ந்து 1967- ஆம் ஆண்டில் மிகப் பெரிய ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. அன்று நடந்த போராட்டமும், அதற்குப் பிறகான ஆட்சி மாற்றமும் இந்த தமிழ் மண்ணிற்க்கு கிடைத்த வாழ்வாதார சுதந்திரம் என்றே குறிப்பிடலாம். காரணம், அதனுள் இந்த மண் சார்ந்த பல்வேறு சமூகக் காரணிகள் பொதிந்துள்ளன.
1954- ஆம் ஆண்டில் முதலமைச்சராக பதவி ஏற்ற கர்ம வீரர் காமராஜர் அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை இந்த மண்ணில் உருவாக்கினார். அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த பக்தவச்சலம், தனது அதிகாரத்தின் வழியே இந்தியை பயிற்று மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் கொண்டு வந்தார். இதே மொழித் திணிப்பு வேலையை இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு வெற்றிகரமாக நிறைவேற்றி இருந்தது.
ஆனால், நீதிக் கட்சியின் ஆட்சியானது, 1921- ஆம் ஆண்டிலேயே “அனைவருக்கும் கல்வி” என்ற சட்டத்தை இங்கு இயற்றி அதனை நடைமுறைப் படுத்தியிருந்தது. இதன் வழியாக, அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படைக் கல்வியை வழங்கி இருந்தது. ஆனால், இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் உயர்ஜாதி மக்களுக்கு மட்டுமே கல்வி வழங்கப்பட்டிருந்தது. இதனால், அங்குள்ள இடைநிலை மற்றும் கடை நிலை சாதியினர் கல்வியின் வாடை அறியாமல் இருந்தனர். இந்த சூழலில், அந்தந்த மாநிலத்தின் மொழிக்கு பதிலாக, ஆட்சி- அதிகாரத்தின் வழியே உள்ளே வந்த இந்தி மொழியை அந்தந்த மாநிலத்து அனைத்து உயர்சாதியினரும் பற்றிப் பிடித்துக் கொண்டனர். இந்தியை புதியதொரு பயிற்று மொழியாகவும் ஏற்றுக் கொண்டனர். அங்குள்ள தாய் மொழிகள் ஒரே அடியில் வீழ்த்தப்பட்டன. மேலும், அந்த மொழிகளின் பாரம்பரிய அறிவுகளும், பண்பாடுகளும், தனித் தன்மைகளும் காலப் போக்கில் நிறமிழந்து போயின. இப்படி நிறமிழந்த மொழிகளின் வயதுகள் 600- ஆண்டுகளைத் தாண்டாது.
ஆனால், நமது மண்ணின் தமிழ் மொழிக்கு இன்றைய தேதியில் வயது மூவாயிரம். அதன் அனுபவம் மிக நெடியது. அது செம்மையான இலக்கணமும், செழிப்பான இலக்கியங்களும் ஒருங்கே பெற்றிருந்தது. இதனால் உலகின் செம்மொழிகளில் ஒன்றாக மட்டுமல்ல, மக்களோடு மக்களாக கலந்து விட்ட உலகின் மிகப் பழமையான “புழங்கு மொழி”-யாகவும் தமிழ் மொழி விளங்கிக் கொண்டிருந்தது.
இத்தனை தனித் தன்மைகளையும் தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, ஒரே இரவுக்குள் மாற்றி எழுதி விட முடியுமா என்ன ? அன்றைய காங்கிரஸ் அரசு அதைத்தான் செய்ய நினைத்தது. ஆனால், நமது செம்மையான தமிழ் மண் அதனை மிகக் கடுமையாக எதிர்த்து நின்றது. தக்க பதிலடியும் கொடுத்தது. அதே வேளையில், இந்த மண்ணின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளாத மத்திய ஆட்சியாளர்கள் நம்மை மொழி வெறியர்களாக சித்தரித்தார்கள். தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அந்த நச்சுக் கருத்தை பொது வெளியில் பரப்பினார்கள்.
தமிழர்கள் தங்களின் மொழி குறித்து சுய மோகம் கொண்டவர்கள். பிற மொழிகளை வெறுப்பவர்கள். மொழியை வைத்து அரசியல் செய்பவர்கள். இந்திய மைய நீரோட்டத்தை மறுப்பவர்கள். அது ஒரு முரட்டு இனக் குழு – என்றே வட இந்திய கல்வியாளர்களும், ஊடகங்களும், அறிவு ஜீவிகளும் இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
போலவே, இங்குள்ள பெரும்பான்மையான ஊடகங்களும், கல்வியாளர்களும், அறிவு ஜீவிகளும், நவீன இலக்கியவாதிகளும் – மொழிக்காக இத்தனை தூரம் நாம் சண்டை இட வேண்டுமா என்ன ? இந்தி ஒரு மொழி தானே? அதனை கற்றுக் கொள்வதில் என்ன சிரமம்? ஓடுகிற ரயில் வண்டி கும்மிடிப்பூண்டி நகரை தாண்டி சென்று விட்டாலே நமக்கு இந்தி தேவைப்படுமே? அப்படி, அந்த இடத்தில் இந்தி தெரியாவிட்டால், தவிச்ச வாய்க்கு தண்ணீர் கூடக் கிடைக்காதே.?- என ஆழ்ந்த கவலை கொண்டு நிற்கிறார்கள்.
இன்னொரு புறம், திராவிடக் கட்சியிடம் அரசியல் ரீதியாக தோற்றுப் போன தேசிய கட்சிக்காரர்கள் தங்களின் பங்கிற்க்கு இந்த மொழிப் போரட்டத்தை கொச்சைப் படுத்தி மகிழ்ந்தார்கள். இந்தியை எதிர்க்கும் தலைவர் வீட்டுப் பிள்ளைகள் இந்தி கற்பிக்கும் மத்திய பாடத்திட்ட பள்ளிகளில் படிக்கிறார்கள். இந்தி படித்தால் இந்தியாவின் எந்த மூலைக்கும் வேலைக்குச் செல்லலாம். இந்தி படிக்காத காரணத்தால் தமிழர்கள் வாழ்க்கையில் முன்னேறவேயில்லை. – இப்படி இன்னும் நிறைய, நிறைய மொன்னையான கோஷங்களை முன் வைத்து மொக்கையாக பேசி வருகிறார்கள்.
மேலோட்டமாக பார்க்கும் போது அவர்கள் சொல்வது அத்தனையும் உண்மையாகவே தெரியும். இந்த திராவிட கட்சிகாரர்கள் நம்மை வசமாக ஏமாற்றி விட்டார்கள். நாம் தான் மொழிப் போராட்டத்தை நம்பி மோசம் போய் விட்டோம் என மனதிற்குள் புலம்பிக் கொண்டுதான் உள்ளோம். காரணம், நமக்குத் தேவை நேரடியான உடனடி பலன்கள். அது தான் பிழைக்கத் தெரிந்தவன் வழி முறை. எனவே, இந்தி படிப்பதால் தப்பு ஒன்றுமில்லை.- என நம்முடைய எண்ண ஓட்டங்கள் இப்போது ஊசலாடிக் கொண்டுதானிருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல. இந்தி மொழி என்பது ஒற்றை அதிகாரக் குவிப்பிற்கான மிகப் பெரிய ஆயுதம் என்பதை அவர்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால், அதன் பார,தூரமான விளைவுகளை நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.
அந்த அறிதலின் தரவுகளோடு…
ஷரீப். அஸ்கர் அலி,
வண்ணப்பலகை




You must be logged in to post a comment.