17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மகளிர் வங்கிக் கணக்கில் 5 ஆயிரம்!உரிமைத் தொகை 2 ஆயிரமாக உயர்த்தப்படும்! தமிழ்நாடு முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பை வரவேற்கிறோம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை..

மகளிர் வங்கிக் கணக்கில் 5 ஆயிரம்!உரிமைத் தொகை 2 ஆயிரமாக உயர்த்தப்படும்! தமிழ்நாடு முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பை வரவேற்கிறோம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை..

எழுதியவர்: Askar February 13, 2026, 7:33 pm

மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசால் இன்று அவர்களது வங்கிக் கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது. பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கான தொகை 3000, கோடைக்கால இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கு உதவித்தொகை 2000 என ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இது மகளிரை மனம் குளிரச் செய்யும் மகத்தான அறிவிப்பாகும். இதைச் செயல்படுத்திய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு ஏறத்தாழ ஒன்றரை கோடி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தைத் திமுக தேர்தல் வாக்குறுதியாக அளித்தபோது இது சாத்தியமே இல்லை என்று அதிமுக விமர்சித்தது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளால் வழிமொழியப்பட்டது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியாவின் பிற மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தபோது அதேபோல் மகளிருக்கு உதவித்தொகை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தன. தமிழ்நாட்டில் திமுக அரசு நடைமுறைப்படுத்தும் இந்தத் திட்டத்தைப் பார்த்து இப்போது அசாம், டெல்லி, ஒடிசா, கர்னாடகா, மகராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் முதலான மாநிலங்களில் மாதம் தோறும் மகளிருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இப்படி இந்தியாவுக்கே முன்மாதிரியாக இந்தத் திட்டம் அமைந்துவிட்டது.

உரிமைத் தொகையைப் பெறும் பெண்கள் அந்தத் தொகையை சிறு சிறு கடன்களை அடைப்பதற்கும், தமது குழந்தைகளின் கல்வி , முதியோரின் மருத்துவச் செலவுகள் ஆகியவற்றை ஈடு கட்டுவதற்கும் பயன்படுத்துகின்றனர். சிறிய அளவில் அவர்கள் சேமிக்கவும் செய்கின்றனர். இந்த உரிமைத் தொகை பெண்களுக்கு, குறிப்பாகக் கிராமப்புறப் பெண்களுக்குப் பொருளாதாரத் தற்சார்பை அளித்திருக்கிறது.

தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில் இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜக அதிமுக கூட்டணியினர் சதி செய்துள்ளனர். நீதிமன்றத்தின் மூலமாகத் தடை ஆணை பெறுவதற்கும் முயற்சி செய்து இருக்கிறார்கள். இதை அறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிப்ரவரி மார்ச் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கும் முன்பணமாக 3000 ரூபாயும்; கோடை காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை எதிர்கொள்வதற்காக 2000 ரூபாய் உதவித்தொகையும் சேர்த்து ஐந்தாயிரம் ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட்டுள்ளார். ஒரே நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் மகளிருக்கு இன்று கிடைத்திருக்கிறது. இது அவர்களுடைய மனம் குளிரச் செய்யும் அறிவிப்பு மட்டுமல்ல கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அறிவிப்பும் ஆகும்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போது இந்திய ஒன்றிய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து கிராமப்புற மகளிருக்கு அந்தத் தொகை கூலியாகக் கிடைப்பதற்கு வழி செய்தது. இதனால் கிராமப்புற பொருளாதாரம் சற்றே பாதுகாக்கப்பட்டது. ‘கொரோனா காலத்தில் இந்தியப் பொருளாதாரம் பெரிய அளவில் வீழ்ச்சி அடையாமல் தடுத்ததில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி முக்கிய பங்கு வகித்தது’ என்று பொருளாதார நிபுணர்கள் கூறினர். அதைப் போலத்தான் மகளிர் உரிமைத் திட்டமும் செயல்படுகிறது. இந்தத் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 74% பேர் கிராமப்புறப் பெண்களாவர்.

பெண்களிடம் பணத்தைக் கொடுத்தால் அதை அவர்கள் ஆக்கபூர்வமான வழிகளில் தான் செலவு செய்வார்கள். அது பண சுழற்சியை ஏற்படுத்தி பொருளாதார மேம்பாட்டுக்கு வழி வகுக்கும். மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தமிழ்நாட்டில் அதைத்தான் செய்திருக்கிறது.

‘அடுத்து அமையப் போகிற திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை மாதம் 2000 ரூபாய் என உயர்த்தி வழங்கப்படும்’ என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கிறார். இது யாரும் எதிர்பாராத ஒரு அறிவிப்பாகும். திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெற்று வரும் பெண்கள் ‘மீண்டும் திமுகவைத்தான் ஆட்சியில் அமத்துவோம்!’ என்று உறுதி எடுத்து இருக்கிறார்கள். இந்த அறிவிப்பு அவர்களுக்கெல்லாம் ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது.

2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவோம் என்று திரு நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். அது பொய்யான வாக்குறுதி என்பது அம்பலமானது. 15 லட்சம் அல்ல 15 ரூபாயைக் கூட அவர்கள் கொடுக்கவில்லை. திரு மோடியைப் போல வாயால் வடை சுடுபவரல்ல நமது முதலமைச்சர். மிகச் சிறப்பாக மகளிர் உரிமைத் திட்டத்தை அவர் செயல்படுத்திக் காட்டியுள்ளார். எனவே, அடுத்துவரும் திமுக ஆட்சியில் 2000 ரூபாயும் உறுதியாக வழங்கப்படும் என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.

2021 இல் தான் அளிற்ற வாக்குறுதிகளை மட்டுமின்றி அளிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் காட்டியவர் நமது முதலமைச்சர். காலை உணவுத் திட்டம் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்படவில்லை. ஆனால், அந்தத் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

மக்கள் நல அரசாக, சமூக நீதி அரசாக, இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில், கல்வி வளர்ச்சியில், சுகாதாரக் கட்டமைப்பில் முதல் மாநிலம் என்ற பெருமைகொண்ட அரசாகத் தமிழ்நாடு அரசைத் தலைநிமிரச் செய்திருக்கிறார் நம்முடைய முதலமைச்சர். அவருடைய சாதனை தொடர்வதற்கு தமிழ்நாட்டு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அவரது தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் அமைய ஆதரவு தரவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்

இவண் தொல்.திருமாவளவன் நிறுவனர் – தலைவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!