17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » விடியும் போதே கையில் 5000 ரூபாய்! இனி மகளிர் உரிமை ரூ.2000! குஷியில் உறைந்த இல்லத்தரசிகள்! அதிர்ச்சியில் உறைந்த எதிர்க்கட்சிகள்..

விடியும் போதே கையில் 5000 ரூபாய்! இனி மகளிர் உரிமை ரூ.2000! குஷியில் உறைந்த இல்லத்தரசிகள்! அதிர்ச்சியில் உறைந்த எதிர்க்கட்சிகள்..

எழுதியவர்: Askar February 13, 2026, 9:15 am

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.31 கோடி பெண்களுக்கு, பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான மூன்று மாதங்களுக்கான முன்பணம் மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகை என மொத்தம் 5,000 ரூபாய் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தேர்தல் நடத்தை விதிகளைச் சுட்டிக்காட்டி இந்தத் திட்டத்தை முடக்கச் சதி நடப்பதாகவும், அதை முறியடிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி, தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்தத் தொகையை வழங்க விடாமல் தடுக்க டெல்லி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சில தரப்பினர் நீதிமன்றம் மூலம் முயற்சிப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாக முதல்வர் கூறியுள்ளார். இந்தத் தடையால் பெண்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில், பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான தலா 1,000 ரூபாய் என மொத்தம் 3,000 ரூபாயுடன், கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாகக் கூடுதலாக 2,000 ரூபாய் சேர்த்து, இன்று காலை அனைத்துப் பயனாளிகளின் கணக்கிலும் 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு.

மேலும், தனது உரையில் திராவிட மாடல் அரசின் அடுத்தகட்ட இலக்கு குறித்தும் முதல்வர் பேசியுள்ளார். “திராவிட மாடல் 2.0” ஆட்சியில் தற்போது வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய் உரிமைத் தொகையானது 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். தமிழகப் பெண்களின் ஆதரவோடு மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் இந்த உயர்வு நடைமுறைக்கு வரும் என்றும், எத்தகைய தடைகள் வந்தாலும் பெண்களுக்குத் தந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் தனது பதிவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!