ஜனநாயகத் திருவிழா2026
( தோரணம் -06 )
ஓங்கி வளர்ந்த மூங்கில் காட்டில்!
ஊமை வண்டுகள்!
பெயர் தான் மைசூர் போண்டா. ஆனால், அதன் உள்ளே மைசூர் இருக்காது.
அது போல, தொழில் துறையில், உற்பத்தி துறையில், வேலை வாய்ப்புத் துறையில், பொருளாதார வளர்ச்சியில், உட்கட்டமைப்பு வளர்ச்சியில், கல்வி மற்றும் சுகாதாரத் துறையில், குறிப்பாக, வியாபார மற்றும் பொருளாதாரத் துறையில்….. இந்திய அளவில் முதலிடத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் அல்லது முதலிடத்தில் நின்று கொண்டிருக்கும் நமது தமிழ் நாட்டின் மகத்துவங்கள் பற்றி…..
அதே தமிழ் நாட்டின் அச்சு & காட்சி ஊடகப் பெரு வெளிகளில், எந்த ஒரு வாடையும் இருக்காது. அதைப் பற்றி எல்லாம் அவை திருவாய் மலர்ந்து ஒருபோதும் பேசியதில்லை. அவைகளுக்கு தெரிந்ததெல்லாம் பொழுது போக்கு அம்சங்கள் மட்டுமே.
இன்றல்ல… நேற்றல்ல… கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே, தமிழ்நாட்டு ஊடகங்களின் நிலைப்பாடு இது தான்.
சினிமா, கிரிக்கெட், “கிசு,கிசு”- அரசியல், அடுத்து வந்த டி.வி மீடியாவில்- சீரியல், ஆட்டம் – பாட்டம், அரட்டை – என மக்களை மடை மாற்றிய படியே இருந்தன. இப்போதும் அப்படியே தான் இருக்கின்றன. ஆனால், 1970- களில் தொடங்கிய தமிழ்நாட்டின் தொழிற் புரட்சியால் மாநிலத்தின் உற்பத்தி திறன் மெல்ல, மெல்லக் கூடிக் கொண்டே வந்தது. மாநிலம் எங்கும் ஆரம்பிக்கப்பட்ட சிப்காட், சிட்கோ போன்ற தொழிற் பேட்டைகள் யாவும், அந்தந்த மாவட்டத்திற்கு தேவையான தொழிற்கருவிகளை கூர் தீட்டிக் கொடுத்தன. இதனால், மாவட்டங்கள் தோறும் பரவலான வேலை வாய்ப்புகள், உப தொழில்கள், சுயதொழில் முனைவுகள் என மாநிலத்தின் வாழ்க்கைத் தரங்கள் மேம்பாடு அடைந்து கொண்டே வந்தன. அதற்கு இணையாக போக்குவரத்து வசதிகள், கல்வி மற்றும் சுகாதார விரிவுகள் – என, நட்டு வைத்த மூங்கில் குருத்து பூமிக்குள் வேர் பிடித்து வளர்வதைப் போல, மாநிலத்தின் வளர்ச்சியானது உள் நோக்கிய வளர்ச்சியாகவே முதல் இருபது ஆண்டுகள் ஓடியது.
அதற்குப் பின், 1990- களில் வந்த புதிய பொருளாதார கொள்கைகளால் பெரும் முதலீட்டுத் தொழில்கள் மற்றும் அந்நிய முதலீட்டுத் தொழில்கள் யாவும், தமிழ் நாட்டின் தொழில் கட்டமைப்பு மற்றும் திறன் மிக்க மனித வளத்தைத் தேடி வந்தன. அதில் ஒரு பத்தாண்டுகள் ஓடியது. இப்போது மூங்கில் குருத்து பூமிக்கு மேலே வளரத் தொடங்கியது போல, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிகள் ஸ்தூலமாக வெளிப்படத் தொடங்கியது.
உலகத்தின் போக்குகளை மாற்றி அமைத்த Y2K மாற்றங்கள். அதனைத் தொடர்ந்து வந்த மில்லினியம் 2,000- ஆம் ஆண்டிலிருந்து கணினி மென் பொருள், வன் பொருள், கிராபிக்ஸ், தகவல் தொழில் நுட்பம் என மெய்நிகர் தொழில்களும், மோட்டார் கார் உற்பத்தி தொழில்களும், எலக்ட்ரிக் & எலக்ட்ரானிக் தொழில்களும் நம்மை நோக்கி வந்து கொண்டே இருந்தன. இதனால், சிறு மற்றும் குருந் தொழில்கள் எனப்படும் SME – க்கள் நிரம்பிய இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாடு மாறியது. இன்னொரு பக்கம் ஏற்மதி வாய்ப்புகள் பெருகிக் கொண்டே சென்றன. அத்துடன் படித்த திறன் மிக்க மனித வளங்களும் சேர்ந்து ஏற்றுமதியாகியது. இதனால், மாநிலத்தின் அந்நியச் செலாவணிகள் கூடிக் கொண்டே சென்றது. இப்போது, பரந்து விரிந்து கிடக்கும் வானத்தை நோக்கி நாளுக்கு நாள் உயரே வளர்ந்து செல்லும் மூங்கில் தண்டு போல, தமிழ்நாடு அபார வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இதனால், “பால்…பால்…. மேலும் பால்”- என 1988- ஆம் ஆண்டு பிரிட்டானியா பிஸ்கட்டிற்க்கு ஒரு வானொலி விளம்பரம் வந்தது போல…. தமிழ் நாட்டின் தொழில் இசைவுச் சூழல் ( Eco champer ) நோக்கி பல்நோக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. அதன் காரணமாக, உள்ளூர் வணிகங்கள் பெருகியது. உற்பத்தி பெருகியது. ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்களும் உருவானார்கள். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் உருண்டு பிரண்டன. இதனால், தமிழ்நாடு மிகவும் தன்னிறைவான மாநிலமாக வேக,வேகமாக மாறிக் கொண்டிருந்தது. அதன் உடன் விளைவாக, உலகமய நுகர்வுக் கலாச்சாரம் பன் மடங்குப் பெருகியது. அதில் உருவான விளம்பர அலையினுள் அனைத்து ஊடகங்களும் மூழ்கித் திளைத்தன. ஆனால், இத்தனைப் பெரிய பொருளாதாரப் பெரு வெடிப்பு எப்படி நிகழ்ந்தது ? எங்கிருந்து தொடங்கியது ? என்ற நதி மூலங்கள் தெரிந்தும் கூட, இங்குள்ள ஊடகங்கள் அது குறித்து மறந்தும் பேசிடவில்லை.
ஆம் நண்பர்களே!
தளையத் தளைய வளர்ந்து கொண்டிருந்த அந்த மூங்கில் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த தமிழ் நாட்டு ஊடக வண்டுகள், ஊனமுற்ற ஊமை வண்டுகளாக திண்டு கொழுத்து வட்டமடித்துக் கொண்டிருந்தன.
குறிப்பாக, திராவிட இயக்க ஆட்சியாளர்கள் வகுத்த புதிய தொழிற் கொள்கைகள், மேற் கொண்ட சமூக நலத் திட்டங்கள், பல எதிர்ப்புகளுக்கு இடையே சட்டசபையில் நிறைவேற்றிய சமூகநீதிச் சட்டங்கள் எல்லாம் சேர்ந்து உருவாக்கிய “எல்லார்க்கும் எல்லாம்”- என்ற “திராவிட மாடல்”- சட்டகம் பற்றியும், இந்த சட்டகத்தின் உள்ளே தான் இத்தனை பெரிய பொருளாதார பெரு வெடிப்புகளும் நிகழ்ந்து வருகிறது என்ற தர்க்க ரீதியான உண்மைகளையும் ஊடகங்கள் பேசவில்லை.
ஊடகங்கள் மட்டுமா பேசவில்லை……?
கல்வியாளர்களும் கூட கள்ள மௌனம் காத்து ஊமையாகிப் போனார்கள்.
அவர்களுமா….??? 🤔
ஷரீப். அஸ்கர் அலி, வண்ணப்பலகை




You must be logged in to post a comment.