18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஜனநாயகத் திருவிழா-2026

ஜனநாயகத் திருவிழா-2026

எழுதியவர்: Askar February 12, 2026, 8:32 am

ஜனநாயகத் திருவிழா-2026

( தோரணம் -05 )

மாநில சுயாட்சியின் எழுச்சியும்!

ஞான சூன்யமான ஊடகங்களும்!

1970- ஆம் ஆண்டின் தொடக்கம்.

தமிழ்நாடு சட்டசபை கட்டிடத்தை சற்றே பழுது பார்த்து வெள்ளை அடிக்கும் படி அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி உத்திரவு இடுகிறார். அங்குள்ள உயர் அதிகாரிகள் அந்த உத்திரவை நிறைவேற்ற இயலாமல் சற்று தயங்கி நிற்கிறார்கள்.

அந்த தயக்கத்திற்கான காரணத்தை அறிந்த முதலமைச்சர் பெரும் அதிர்ச்சி அடைகிறார்.

“இது என்ன நியாயம் ! நம்ம மாநிலத்து சட்டசபைக்கு வெள்ளையடிக்கக் கூட மத்திய அரசுகிட்டே அனுமதி வாங்கணுமா ? அதற்கான நிதிக்கு எழுதிப் போட்டு அந்த நிதி வரும் வரைக்கும் காத்திருக்க வேண்டுமா? நாமாக எதையும் செய்ய முடியாதா? அப்படி எனில், மாநிலத்திற்கு என தனியா ஒரு அரசாங்கம் எதற்கு ? – என, தன்னுடைய அமைச்சரவை தோழமைகளிடம் முதலமைச்சர் குறைபட்டுக் கொண்டாராம்.

அப்படிக் குறைபட்டுக் கொண்டவர் அதனை அத்தோடு விட்டு விடவில்லை. தக்க சட்ட வல்லுநர்களை அழைத்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் – ஒரு மாநிலத்தின் உரிமைகள் என்னென்ன ? என்ற விபரங்களை கேட்டு அறிந்து கொண்டார். விபரம் தெரிந்த கையோடு மாநில உரிமைகளை மேலும் ஆய்வு செய்யவும், அதனை நிலை நாட்டவும் ராஜமன்னார் குழு ஒன்றை நியமித்தார்.

மாநிலம் முழுவதும் சுற்றி ஆய்வு செய்த அக்குழு பல ஆக்கப்பூர்வமான தரவுகளோடு சென்னை திரும்பியது. அவர்கள் அளித்த பல்வேறு அறிக்கைகளின் அடிப்படையில்…. …

மத்திய அரசுக்கு இருப்பது போன்றே தமிழ்நாட்டிற்க்கு என்று தனி திட்டக் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. தனி தொழிற் கொள்கை வகுக்கப்பட்டது. இயற்கை வளங்களை ஆய்வு செய்யும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. கல்வி & சுகாதாரக் குழுக்கள் அமைக்கப்பட்டது.

மேற்கண்ட குழுக்களின் பரிந்துரைப்படி, நம்முடைய வேளாண்மை அண்டை மாநில ஆறுகளையும், பருவ மழைகளையும் மட்டுமே நம்பியுள்ளது என்பது கண்டறியப்பட்டது. எனவே, மக்களின் வேலை வாய்ப்புகளுக்கு மாநிலத்தின் பல பகுதிகளிலும் சிப்காட், சிட்கோ போன்ற தொழிற் பேட்டைகள் அமைக்கப்பட்டது. அத்துடன் தமிழ்நாடு அரசு பாட நூல் கழகம், தமிழ்நாடு சுற்றுலாத்துறை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புதிய சுகாதார கட்டமைப்புகள், நீர்பாசன கட்டமைப்புகள், மின் உற்பத்தி நிலையங்கள், தாட்கோ, ஒருங்கிணைந்த வேளாண் விற்பனைக் கூடம், பொது உணவு விநியோக அமைப்பு ( ரேஷன் ) போன்ற 10- க்ககும் மேற்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாம் விரைவாக உருவாக்கப்பட்டன.
இந்தியாவின் எந்தவொரு மாநில அரசும் இத்தனை பர,பரப்பாக செயல்படவில்லை.

இப்படி, மாநில சுயாட்சி என்ற தத்துவத்திற்க்கு மிகப் பெரிய செயல் வடிவம் தந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், தனது முதல் ஏழாண்டு கால ஆட்சியில், அதே தத்துவத்திற்க்கு மிகப் பெரிய புற வடிவத்தையும் உருவாக்கினார். அதே முதல் ஏழு ஆண்டு காலத்தில் தான் தமிழ்நாட்டின் முகவரிகள் மிகப் பெரிய அளவுக்கு மாற்றி எழுதப்பட்டது.
அதன் மூலம், இந்த தமிழ்நாட்டை அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயார்படுத்தி வைத்தார்.
அப்படி அவர் 50 ஆண்டுகளுக்கு முன்பே போட்டு வைத்த பலமான அடித் தளத்தின் மீது தான் இன்றைய சர்வதேசத் தரமான மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட தேசிய முகமைகளின் “சர்வே” ஆய்வுகள் இதனை உறுதி செய்கின்றன.

மேலும், அதே “மாநில சுயாட்சி”-யின் உட்சபட்சமாக, இந்தியாவின் ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களும் அந்தந்த மாநில தலைமையகத்தில் சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றும் உரிமையை, அன்றைய இந்திரா காந்தி அரசிடம் வாதாடி பெற்றுக் கொடுத்தார். அதன் படி 1974- ஆம் ஆண்டு ஆகஸ்ட்
15- ஆம் தேதியன்று சுதந்திர தினக் கொடியை சென்னை கோட்டை கொத்தளத்தில் ஏற்றி வைத்தார்.

இந்த இடை விடாத தொடர் உழைப்பு பற்றியும் மாநில சுயாட்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கி தி.மு.க. அரசு பற்றியும் எந்தவொரு ஊடகமும் துளி அளவு கூட மூச்சு விடவில்லை.

கூட்டாட்சி பற்றியோ மாநில சுயாட்சி பற்றியோ நமது இந்திய ஊடகங்களுக்கு எந்தவொரு அறிவும் இல்லை. அக்கறையும் இல்லை. அது மட்டுமா ? ஒரு தேசத்தின், ஒரு மாநிலத்தின் சமூகப் பொருளாதார மாற்றங்கள் பற்றிய அறிவும் இல்லை. அக்கறையும் இல்லை. அவை எல்லாம், வெறும் பொழுது போக்குகளையும், பரபரப்பு செய்திகளையும் பரப்பி வரும் *ஞான சூன்யங்கள்* என்பதற்கான….
தக்க தரவுகளுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.

 

ஷரீப். அஸ்கர் அலி,
வண்ணப்பலகை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!