17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஜனநாயகத் திருவிழா -2026

ஜனநாயகத் திருவிழா -2026

எழுதியவர்: Askar February 11, 2026, 7:38 am

ஜனநாயகத் திருவிழா -2026

( தோரணம் – 04 )

“அண்ணா”-ந்து
பார்க்க வைத்த
அண்ணாவின் உரை

1962- ஆம் ஆண்டு

இந்திய நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அறிஞர் அண்ணா அவர்கள் தன்னை ஒரு “டிரவிடியன் ஸ்டாக்”- என அறிமுகம் செய்து கொண்டு அந்த அவையில் பேச ஆரம்பிக்கிறார்.

இதுவரையிலும் பேசப்படாத “மாநில உரிமைகள்”-பற்றி பேசத் தொடங்குகிறார். அது இந்தியாவின் ஒற்றுமைக்கு உலை வைக்கும் குரலோ ? என அந்த அவை அச்சத்துடன் கவனிக்கத் தொடங்குகிறது. அவருடைய பேச்சின் ஒவ்வொரு வாக்கியமும் தொடங்கும் போது தேச ஒற்றுமையை குழைப்பது போலத் தெரிகிறது. ஆனால், அவர் அந்த வாக்கியத்தை முடிக்கும் போது அது மாநில உரிமைகளை உள்ளடக்கியதாகவே முடிகிறது. இப்படி, அவருடைய நீண்ட உரையானது முழுக்க, முழுக்க எதிரும் – புதிருமாகவே அமைந்து இருந்தது.

என்ன காரணம் ?

ஒரு காரணமும் இல்லை. மைய அரசும் அதன் அதிகார வர்க்கமும் தேச ஒற்றுமை என்ற பெயரில் நம்முடைய பன்முகத் தன்மைகளை எல்லாம் ஓரங்கட்டி வைத்து விட்டு, அதற்குப் பகரமாக, டில்லிப் பட்டிணத்து அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தின் குரலையும், மொழியையும் ஒட்டு மொத்த தேசத்தின் குரலாகவும், மொழியாகவும் இருக்க வேண்டும் என விரும்பியது. அதற்காக, பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தது. அதற்காக, தனது இந்தி மொழியையும், அதன் பண்பாடுகளையும் பிற மாநிலங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தியது. இந்த மொழித் திணிப்பு மேட்டிமைகளை எல்லாம் உடைத்து நொறுக்கும் படியாக, அறிஞர் அண்ணாவின் உரையானது தீர்க்கமாக வெளிப்பட்டது. எனவே அந்தப் புதிய குரலை அவர்கள் மிகவும் சந்தேகத்துடன் பார்த்தார்கள.

அங்குள்ள சூழலுக்கு எதிர் நிலையில் நின்று, மாநில உரிமைகளை சரளமான ஆங்கிலத்தில் மிடுக்காகப் பேசிய அந்த தமிழ்நாட்டுக் காரனை அந்த அவை வியப்புடன் “அண்ணா”-ந்து பார்த்தது. அப்படி ஒரு ஆளுமையைப் பார்த்த பிறகு தான் இந்தியாவில் இந்தி பேசாத மக்களும், இந்தி பேசாத தலைவர்களும் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.

அதிலும், அந்த ஆங்கில உரையானது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை, அதன் அசல் வடிவத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது. எனவே, யாராலும் அதனை மறுத்துப் பேச முடியவில்லை. அத்துடன், அண்ணாவின் அன்றைய உரையை, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் புதியதொரு பரிமாணமாகப் பார்த்தார்கள். சட்டமேதை அண்ணல் அம்பேத்காரால் எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டதோ அந்த நோக்கத்தின் திசையை நோக்கி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பயணிக்கத் தொடங்கியது.

கடைக் கோடி மனிதனுக்கும் இந்தியன் என்ற அடையாளத்தை தந்து, அவனது வாக்குகளின் மூலமாக மக்களாட்சியை மலரச் செய்யும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும், “எல்லார்க்கும் எல்லாம்”- என்ற சமூக நீதிக் கோட்ப்பாட்டைக் கொண்ட திராவிட சித்தாந்தமும் ஒரே நேர்கோட்டுப் புள்ளியில் சந்திந்தித்துக் கொண்டது. அதற்கு ஆங்கிலம் எனும் இணைப்பு மொழியே பாலமாக அமைந்தது.

இது திராவிட சித்தாந்திற்கு இந்திய அளவில் கிடைத்த முதல் வெற்றியாகும். இதே திராவிட சித்தாந்தம் செயல் வடிவில் செய்த சாதனைகளோடு அடுத்த பதிவில் சந்திப்போம்.

ஷரீப். அஸ்கர் அலி,
வண்ணப்பலகை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!