தேர்தல் திருவிழா – 2026
( தோரணம் -03 )
ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்!
தேர்தல் கால கூட்டணிகள் பற்றி மணிக் கணக்கில் பேசும் நமது ஊடகங்கள், கூட்டாட்சி பற்றி என்றைக்காவது பேசி இருக்கிறதா? கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, அப்படி எல்லாம் எந்தவொரு வாத- விவாதங்களும் நமது ஊடகத்தில் எழவேயில்லை.
இது என்ன புதுக் கதை?
தேர்தல் காலத்தில் கூட்டணி பற்றித் தானே பேச முடியும் ? சொல்லிப் புரிய வைக்க முடியாத கூட்டாட்சி பற்றி பேசி நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும் ? என்ற உங்களின் பலமான கேள்வி என் காதில் விழாமலில்லை.
ஆனால், நமது தேசத்தின் அரசியலை தெளிவாகப் புரிந்து கொள்ள கூட்டாட்சி தத்துவத்தைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆம் நண்பர்களே !
நமக்கான அரசியல் புரிதல்களை நாம் இந்தப் புள்ளியில் இருந்து தான் தொடங்க வேண்டும்.
இந்தக் “கூட்டாட்சி” தத்துவம் ஒரு நாணயம் போன்றது. “மாநில சுயாட்சி” என்பது அதன் மறுபக்கம் ஆகும். இந்த இரண்டு காரணிகளும் ஒன்றுக்கொன்று இணையாக செயல்பட வேண்டும் என்பது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஏற்பாடு. அப்போது தான், ஆட்சி மன்ற அதிகாரங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் சீராகப் பரவிச் செல்லும். இது ஒவ்வொரு மாநிலங்களையும் “தன்னாட்சி”-யோடு இயங்க வைக்கும். இதனால் அந்தந்த மாநிலங்களும் தன்னுடைய சொந்த வளங்களையும், வலிமைகளையும் பயன்படுத்தி வளர்ச்சி அடையும். அதனை மையத்தில் உள்ள “கூட்டாட்சி”- வழி நடத்தும். இது தான் இந்திய ஜனநாயகத்தின் செயல் திட்டம்.
குறிப்பாக, கல்வி, சுகாதாரம், தொழிற்துறை, வருவாய் துறை, உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் போன்ற அடிப்படை அலகுகள் ஒவ்வொன்றும் அந்தந்த மாநில அதிகாரத்தின் கைகளில் இருக்க வேண்டும். இதனை மைய அரசு நெறிப்படுத்தி நடத்த வேண்டும்.
ஆனால், ஆரம்பக் காலந்தொட்டே இந்த செயல் திட்டங்கள் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. மைய அதிகாரத்தில் உள்ள டில்லி ராஜங்கத்தின் உயர் மட்ட அதிகார வர்க்க அதிகாரிகள், அதனை தங்களுடைய “நார்த் ப்ளாக்”- மற்றும் “சௌத் ப்ளாக்”- எனும் அதிகார வரம்புகளுக்குள் சிறை பிடித்து வைத்துக் கொண்டார்கள்.
கடந்த 60-ஆண்டுகளில் மைய அதிகாரமானது இப்படியாக, தன்னை மென்மேலும் வலிமை படுத்திக் கொண்டது. அந்த வலிமையான கட்டமைப்பின் மீது தான் இன்றைய மதவாத மற்றும் இனவாத அரசியல் செய்யும் சக்திகள் அமர்ந்து கொண்டு ஒட்டு மொத்த ஜனநாயக அமைப்புகளையும் செயல் இழக்கச் செய்து வருகிறது.
கல்வி அதிகாரத்தை வைத்துக் கொண்டு “நீட்”- போன்ற மைய அதிகாரத் தேர்வுகளை மாநிலத்தின் மீது திணிக்கிறது. போலவே, பிராந்திய மொழிகளை அழித்தொழிக்கும் மும்மொழித் திட்டத்தை விரைவு படுத்துகிறது.
வருவாய் அதிகாரத்தை வைத்து மாநிலங்கள் வசூலித்துக் கொண்டிருந்த வரி வருவாய்களை GSTன் பெயரால் வசூல் நிதிகளை அப்படியே வாரிச் சுருட்டி எடுத்துக் கொண்டு சென்று விடுகிறது. அப்படி எடுத்துச் சென்ற நிதிகளை தனக்குப் பிடித்த மாநிலங்களுக்கு மட்டும் பல மடங்கு திருப்பித் தருகிறது. அதே நேரத்தில் மாநில சுயாட்சி முழக்கம் எழுப்பும் தமிழ் நாட்டிற்க்கு 1 ருபாய்க்கு 0.29 பைசா மட்டுமே திருப்பித் தருகிறது.
இந்தியா போன்ற பார்ப்பன மேட்டிமை கொண்ட நாட்டில் இப்படி எல்லாம் நடக்கும் என்பதை முன் உணர்ந்த திராவிட இயக்கத் தலைவர்கள் “எல்லார்க்கும் எல்லாம்” – என்ற சமூக நீதி முழக்கத்தை “மாநில சுயாட்சி”- “மத்தியில் கூட்டாட்சி”-என மிக வீரியமாக முன் எடுத்தார்கள்.
மாநில சுயாட்சி உரிமைகளை முன் எடுத்த திராவிடத் தலைவர்கள் யார் ? அப்படி எதை எல்லாம் முன் எடுத்து வெற்றி கண்டார்கள் ? அதன் நேரடி பயன்கள் என்ன ? விளைவுகள் என்ன ? என்பதை எல்லாம் அடுத்த பதிவில் பார்ப்போம்.
ஷரீப். அஸ்கர் அலி, வண்ணப்பலகை




You must be logged in to post a comment.