18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஜனநாயகத் திருவிழா-2026

ஜனநாயகத் திருவிழா-2026

எழுதியவர்: Askar February 9, 2026, 8:20 am

ஜனநாயகத் திருவிழா-2026

( தோரணம் -02 )

“படித்த பதர்”-களை
உருவாக்கும் ஊடகங்கள்!

₹300/ – கொடுத்து ஒரு செருப்பு வாங்கினால் கூட அதன் தரம் என்ன ? எத்தனை காலம் உழைக்கும் ? நம் காலுக்கு பொருத்தமாக இருக்கிறதா ? என அதனைக் கையில் எடுத்து எண் திசைகளிலும் சுழற்றிப் பார்த்தே ஒரு முடிவுக்கு வருகிறோம். நாம் கொடுக்கும் காசுக்கு ஏற்ற “கௌரவதை”- கிடைக்குமா ? என ஒரு நிமிடம் யோசித்து, பிறகு ஒரு முடிவுக்கு வருகிறோம். காரணம், நாம் செலவளிக்கும் காசுக்கு ஏற்ற பொருள் கிடைக்க வேண்டுமல்லவா ?

ஆனால், நாம் காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் அச்சு ஊடகங்களில் அல்லது காசு கட்டிப் பார்க்கும் காட்சி ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் தரம் பற்றி நாம் யோசிப்பதேயில்லை. அந்த செய்தியின் மீதான நம்பகத் தன்மை பற்றி யோசிப்பதேயில்லை. அவர்கள் அச்சடிப்பதை, அவர்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்ள நாம் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கிறோம். நமக்குத் தேவை புதிய செய்திகள். அதிலும் சுவாரசியமான செய்திகள். எனவே, நாம் எதைப் பற்றியும் யோசிப்பதில்லை.

இதற்க்கு என்ன காரணம் ?

செய்தி என்பது செருப்பைப் போல ஒரு கைப் பொருள் அல்ல. அது ஒரு சேவை வடிவம். எனவே, அதன் தரம் பற்றி, அதன் தாக்கங்கள் பற்றி, அதன் பின் விளைவுகள் பற்றி நம்மால் ஊகித்து அறிய முடிவதில்லை. அதற்கான பயிற்சியும் நமக்கில்லை. எனவே, இந்த அத்தனை பொறுப்புகளையும் தூக்கி ஊடகங்களின் கைகளில் கொடுத்து விட்டு நாம் வெறும் பார்வையாளர்களாக நின்று விடுகிறோம்.

அத்துடன் நின்றோமா என்ன ?
இல்லையே!

அவரவருக்குப் பிடித்த ஊடகத்தை முற்றும் முழுவதுமாக நம்பி அவைகளை தூக்கிப் பிடிக்க ஆரம்பித்து விடுகிறோம்.

I am a Hindu reader.

தினமணி – நடுப்பக்க கட்டுரை, தலையங்கம் – எனது “பேவரைட்”.

விகடன் தான் “மாஸ்”

“துக்ளக்”- ஒரு அரசியல் சாணக்கியன்.

“NDTV”- அன்றைக்கே சொன்னான்.

இப்படி சொல்லிக் கொண்டே ஆளுக்கொரு பல்லாக்கை தூக்கிச் சுமந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால், நம்மிடையே உள்ள எந்தவொரு ஊடகங்களும் நம்மை “எஜூக்கேட்”- செய்வதில்லை. மாறாக, ஆளும் வர்க்கத்திற்க்கும், அதிகார வர்க்கத்திற்கும் ஏற்ற வகையில் நம்முடைய மனோநிலைகளை மாற்றி அமைக்கும் வேலைகளை மட்டுமே செய்து வருகின்றன.

குறிப்பாக, நமது தேசத்தின் இறையாண்மை பற்றி, அதில் நம் அனைவருக்கும் உள்ள பொறுப்புகள் பற்றி, நம்மை எல்லாம் இந்தியர்களாக வாழ வழி வகை செய்திருக்கும் இந்தியக் குடியரசின் அரசமைப்பு சட்டம் பற்றி, அதன் ஜனநாயகம் பற்றி, ஒருவருக்கு ஒரு ஓட்டு என்ற ஒப்பற்ற தேர்தல் அமைப்பு பற்றி நம்முடைய ஊடகங்கள் ஒரு நாள் – ஒரு பொழுது வாய் திறந்து பேசியதேயில்லை. அதற்கான அவசியமும் அவைகளுக்கு இல்லை. ஆனால், ஒட்டு மொத்த மக்களின் கவனமும் நம்முடைய இந்திய இறையாண்மையின் பக்கம் வந்து விடாமல் இருப்பதற்க்கு தேவையான
“கவனச் சிதறல்கள்”- ஐ தொடர்ந்து உருவாக்குவதில் அவை கவனமாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, நமக்குத் தேவையான பல்வேறு அடிப்படை அறிதல்களை எல்லாம் தூக்கி மறைத்து வைத்து விட்டு, தேவையற்ற அம்சங்களை நம்மீது தொடர்ந்து திணித்து வருகின்றன. நம்மை எல்லாம் “படித்த பதர்”- களா மாற்றி வைத்துள்ளன. ஆனால், நாம் தான் கொஞ்சமும் விட்டுத் தராமல் இந்திய ஊடகங்கள் – இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் – என நீட்டி முழக்கிக் கொண்டிருக்கிறோம். அதற்கான அடிப்படை தகுதியை அவைகள் வெகு நாட்களுக்கு முன்பே இழந்து விட்டன.

அவைகளின் மேலோட்டமான போக்குகளைப் பற்றி தக்க உதாரணங்களோடு அடுத்து பேசுவோம்.

ஷரீப். அஸ்கர் அலி
வண்ணப்பலகை

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!