ஜனநாயகத் திருவிழா -2026
(தோரணம் -01)
ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்தத் திருவிழாவிற்கு, அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. போலவே, மக்களாகிய நாமும் அதற்கு தயாராக வேண்டும். ஏனெனில், இத்தனை பெரிய விழாவின் கதாநாயகர்களே நாம் தான். முழுக்க, முழுக்க இது நமக்காகவே நடத்தப்படும் திருவிழா. இதன் நேரடி மற்றும் உடனடி பலன்கள் நமக்கு கிடைக்காமல் இருக்கலாம்.
ஆனால், வேர்களுக்கு ஊற்றப்படும் தண்ணீர் அப்படியே மேலேறி கிளைகளுக்கும், தண்டுகளுக்கும், இலைகளுக்கும், பூக்களுக்கும் வருவது போல, இந்த தேர்தல் முறையும், அதற்கு பிறகு தேர்ந்தெடுக்கப்படும் அரசும், ஜனநாயக வழிமுறைகளும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வாழ்வியல் உரிமைகளை உறுதி செய்கிறது. நம்முடைய சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் நம்மிடம் தக்க வைக்கிறது. எனவே, இந்த ஜனநாயகத் திருவிழாவினை நாம் ஆக்கப்பூர்வமாக எதிர் கொள்ள வேண்டும்……
மாறாக, போகிற போக்கில் இடது கையால் கையாண்டு விடக் கூடாது. நம்முடைய இந்தியக் குடியரசு நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளின் வழியே தேர்தல் ஜனநாயகத்தை அணுக வேண்டும். எடுத்த எடுப்பில் எதையும் தள்ளி வைத்து விடாமல், நம்மைச் சுற்றியுள்ள அத்தனை அம்சங்களையும் ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு, அதன் குறை- நிறைகள், ஏற்ற- இறக்கங்கள், லாப- நஷ்டங்கள் – என எல்லாவற்றையும் சீர் தூக்கிப் பார்த்து, அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
அந்த வகையில்;
நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் அச்சு ஊடகம் & காட்சி ஊடகம் எப்படி செயல்படுகிறது ? அதனை எந்த எல்லைவரை நம்பலாம். எந்த இடத்தில் அதனை வெளியே நிறுத்தலாம். ஊடக ஆக்கிரமிப்புகளை சமாளித்து, நமக்கான உண்மைகளை எப்படி கண்டறிவது ? என்பது பற்றி விரிவாக உரையாடுவோம்.
ஷரீப். அஸ்கர் அலி
வண்ணப்பலகை




You must be logged in to post a comment.