“வீட்டுலயே பிரசவம் பார்த்த வீட்டுக்காரர்: பலியான பச்சிளம் உயிர்” நெல்லையில் நடந்த பயங்கரம்.!
மாநகரம், மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவைச் சேர்ந்த நியாஸ்அலி என்பவரின் மகன் நசிம்உசேன் (35).
இவருடைய மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்குப் பிரசவ தேதி நெருங்கியுள்ளது. இதனால் மேலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், முறையான மருத்துவப் பரிசோதனைக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால், நசிம்உசேன் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், நேற்று இரவு நேரத்தில் வீட்டில் வைத்தே அவருக்குத் தானாகவே பிரசவம் பார்த்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது.
இந்தச் சோகமான சம்பவத்திற்குப் பிறகு, இறந்த பச்சிளம் குழந்தையின் உடலை யாருக்கும் தெரியாமல் காட்டு ஜிம்மா பள்ளிவாசலில் அடக்கம் செய்துள்ளனர். இது குறித்துத் தகவலறிந்த மேலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுமதி, உடனடியாகப் போலீசில் புகார் அளித்தார். மருத்துவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நசிம்உசேனைக் கைது செய்துள்ளனர். நவீன மருத்துவ வசதிகள் இவ்வளவு இருந்தும், முறையான வழிகாட்டுதல் இன்றிச் செயல்பட்டு ஒரு பிஞ்சு உயிரைப் பலி கொடுத்த இந்தச் சம்பவம் நெல்லை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




You must be logged in to post a comment.