தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 4-வது பொதிகை புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பழனி நாடார் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்) மரு.தி.சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்), தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் (சென்னை) வீரா பாலன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.


மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் படி தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தகப் பதிப்பகம் இணைந்து நடத்தும் மாபெரும் 4-வது பொதிகை புத்தகத் திருவிழா 30.01.2026 அன்று துவங்கி 08.02.2026 வரை நடைபெற உள்ளது. இப்புத்தகத் திருவிழாவில் அறுபதுக்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இப்புத்தக அரங்கில் சாகித்ய அகாடமி வரலாறு, புதினம், அரசியல், தலைவர்களின் படைப்புகள், பொழுது போக்கு கதை நூல்கள், இலக்கியம் தொடர்பான நூல்கள் போன்ற பல்வேறு புத்தகங்கள் இடம் பெற உள்ளன. சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி, வனத்துறை, Postal Life Insurance மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ.125 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது என்பதை மிகப்பெரிய சாதனையாக கருதுகிறோம். இது போன்ற புத்தகத் திருவிழாவினை அனைத்து மாவட்ட தலைநகரிலும் நடத்துவதற்கு உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், சிந்தனை அரங்கத்தில் சாகித்ய அகாடமி மற்றும் புரஸ்கார் விருது பெற்ற உள்ளுர் முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் சிறந்த கலைஞர்களின் சிறப்புரை நிகழ்ச்சி, பட்டி மன்றங்களும் இடம்பெற உள்ளன. பாரம்பரிய உணவக அரங்குகள், சிறுவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களிடையே வாசிப்பினை அறிமுகப்படுத்தும் விதமாக பல்திறன் போட்டிகள் நடைபெற உள்ளது. நல்ல புத்தகம் என்பது 100 நண்பர்களுக்கு சமம். ஆகவே பொது மக்களாகிய நீங்கள் 30.01.2026 அன்று துவங்கி 08.02.2026 வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்து நல்ல புத்தகங்களை வாங்கி வாழ்வில் முன்னேறி அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குங்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார்.
தொடர்ந்து, எழுத்தாளர் பவா. செல்லத்துரை வழங்கும் தமிழுக்கு மூன்று புதிய நாவல் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் சிறப்புரையும், தலைவர். பள்ளிக் கல்வி மாநில கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவினர் தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினர் முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் வழங்கும் சுற்றுச்சூழலும் நாமும் என்ற தலைப்பில் சிறப்புரையும், விஜய் டிவி புகழ் வில்லிசை அரசி செல்வி. மாதவி வழங்கும் வில்லிசை கச்சேரியும், முன்னதாக ஸ்ரீகுமார் பேண்டு கலைக் குழுவினரின் பேண்டு வாத்தியமும் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், தென்காசி சார் ஆட்சியர் வைஷ்ணவி பால், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரா.சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் அதியமான், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஷேக்அப்துல்லா. உதவி இயக்குநர் பேரூராட்சிகள் (திருநெல்வேலி) கிறிஸ்டோபர் தாஸ் மற்றும் அரசு அலுவலர்கள். பொதுமக்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.