17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

எழுதியவர்: Askar January 6, 2026, 9:03 am

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

ஆண்சாட்சியும்.!பெண் சாட்சிகளும்..!

அத்தியாயம் 30

நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்! எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும் எழுதுபவர் அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தது போல் எழுத மறுக்காமல் எழுதட்டும். கடன் வாங்கியவர், எழுதுவதற்குரிய வாசகங்களைச் சொல்லட்டும்! தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதில் எதையும் குறைத்திடக் கூடாது. கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ, பலவீனராகவோ, எழுதுவதற்கு ஏற்பச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லாவிட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) அவ்விரு பெண்களில் ஒருத்தி தவறாகக் கூறினால் மற்றொருத்தி நினைவு படுத்துவாள் அழைக்கப்படும் போது சாட்சிகள் மறுக்கக் கூடாது. சிறிதோ, பெரிதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள்! இதுவே அல்லாஹ்விடம் நேர்மையானது; சாட்சியத்தை நிரூபிக்கத்தக்கது; ஒருவருக்கொருவர் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்றது. உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாரமாக இருந்தால் தவிர. (கடனில்லாத) வியாபாரத்தை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்களுக்குக் குற்றமாகாது. ஒப்பந்தம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! எழுத்தருக்கோ, சாட்சிக்கோ எந்த இடையூறும் அளிக்கப்படக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் மீது குற்றமாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தருவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.

(திருக்குர்ஆன் 2:282)

திருக்குர்ஆனின் இந்த நீண்ட வசனம் ஆழ்ந்த பொருள் கொண்டது. மனிதனின் மனநிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு கொடுக்கல், வாங்கல்கள், ஒப்பந்தங்களுக்கு சாட்சிகள் அவசியம் என்ற அற்புதமான அறிவுரையை வழங்குகிறது.

இந்த சாட்சிகளின் வரிசை இரண்டு ஆண்கள் அல்லது ஒரு ஆண் இரண்டு பெண்கள் என்ற வகையில் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள கூறுவதால் ஆண்கள் பெண்கள் உடற்கூறுகள் மற்றும் அறிவுதிறன்களில் உள்ள சில வித்தியாசங்களை மருத்துவ ரீதியாக சிந்திக்கலாம். இருப்பினும் எல்லா காரணங்களையும் அல்லாஹ்வே அறிந்தவன். ஆண்களும், பெண்களும் சமம் என்று இன்றைய நவீனத்துவ வாதிகள் பேசினாலும்,உடல் அமைப்பு, உடல் வலிமை ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள் இருவரையும் வெளிப்படையாக வேறுபடுத்திக் காட்டுகின்றன.  இதுபோன்றே ஆண், பெண்களுக்கிடையே மூளையில் வேறுபாடுகள் உள்ளன. ஆண்கள், பெண்கள் மூளையில் அளவு, அமைப்பு, வேதியியல், மற்றும் செயல்பாடுகளில் நுட்பமான வேறுபாடுகள் உள்ளன. ஆண்கள் மூளை சாம்பல்நிற பொருளிலும், பெண்கள் மூளை வெள்ளை நிற பொருளிலும் காணப்படுகிறது. இந்த வேறுபாடுகளால் உணர்ச்சி, செயலாக்கம், தகவல் தொடர்பு போன்ற பல பணிகளில் வேறுபடலாம். ஆண்களின் மூளை பெண்களின் மூளையைவிட10-15%அளவில் பெரிதாக இருந்தாலும், இது அறிவாற்றல் திறனை பாதிப்பதில்லை.

ஆண்கள் நியூரான்கள் நிறைந்த சாம்பல் பொருளை (Grey matters) பயன்படுத்திச் சிந்திக்கிறார்கள். பெண்கள் நியூரான்களுக்கு இடையே இணைப்புகளைக் கொண்ட வெள்ளைப் பொருளில்(white matter) அதிக இணைப்புகளை கொண்டுள்ளனர்.

ஆண்களின் மூளை இடது மற்றும் வலது அரைக்கோளங்களுக்கு இடையே குறைவான இணைப்புகளையும் அதே அரைக்கோளத்திற்குள் அதிகமான இணைப்புகளையும் கொண்டுள்ளது.

பெண்களின் மூளையில் இதற்கு நேர்மாறாக இரண்டு அரைக்கோளங்களுக்கு இடையே அதிக இணைப்புகளையும் பரந்த வலையமைப்பையும் கொண்டுள்ளது. நியூரோ டிரான்ஸ்மீட்டர்களின் அளவு மற்றும் செயல்படும் விதம் இரண்டும் வேறுபடுகின்றன.

இந்த வேறுபாடுகளால் ஆண்கள் மற்றும் பெண்கள் இவர்களின் செயல்திறனில், தகவல்களை செயலாக்கும் விதம், உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம், மற்றும் சிக்கல்களை தீர்க்கும் அணுகுமுறை, ஆகியவற்றில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஆண்கள் பணிசார்ந்த திட்டங்களில் சிறந்து விளங்கவும், பெண்கள் மொழி சார்ந்த பணிகளில் சிறப்பாக செயல்படவும் முடிகிறது. சிறுமூளை பாலினங்களுக்கிடையே சற்று வித்தியாசமாக இருப்பதோடு, நடத்தை மற்றும் சிந்தனையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. செரோடோனின் சுரப்புகளின் வித்தியாசங்களால் பெண்கள் பதட்டம் மற்றும் மனச்சோர்வுக்கு விரைவில் ஆளாகி விடுகிறார்கள். நரம்பியல் விஞ்ஞானிகள், ஆண்களின் மூளை 1378 கிராம் எனவும், பெண்களின் மூளை 1248 கிராம் எனவும், பொதுவாகவும் இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.ஹைப்போ தாலமஸில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆண் மற்றும் பெண் மூளைகளின் வேறுபாட்டின் நான்கு முக்கிய பகுதிகளை ஆராய்கிறார்கள். செயலாக்கம், வேதியியல், கட்டமைப்பு, செயல்படும் விதம் என்று ஆராயும்போது, பெண்களுக்கு ஒரு பெரிய ஹிப்போகேம்பஸ் உள்ளது.இதனால் அதிகமான உணர்ச்சி தகவல்களை மூளைக்குள் (மனதிற்குள்)உள்ளிட பெண்கள் முயலுகின்றனர்.இது பெண்களை உணர்ச்சி வசப்படும் நிலைக்கு ஆளாக்குவதால், இவர்களின் வார்த்தைகளில் உறுதித்தன்மை குறையும். ஆனால் ஆண்களின் அமைப்பில் அவர்களின் அமைப்பின்படி, தகவல்களை பகுப்பாய்வு செய்து உறுதியாக வெளிப்படுத்த முடியும் என்பதால் ஆணின் நிலைப்பாடு உறுதியாக இருக்கிறது.பொறுப்புணர்வு, நிதிகளை கையாளுதல்,போன்றவற்றில் பெண்களே சிறந்தவர்களாக இருப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. சுருக்கமாக, பெண்கள் உணர்ச்சி நிலையை விரைவில் அடைபவர்களாகவும், இரக்கம் அதிகம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள். ஆண்கள் நிகழ்வுகளை பகுப்பாய்வு செய்து, அதனை உறுதியாக வெளிப்படுத்தும் தன்மையில் இருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள் என்று இரு பாலினத்தவரின் இந்த வேறுபாடுகள்,சாட்சிகள் என்று வரும் போது, ஒரு நிகழ்விற்கு இரண்டு ஆண்கள் அல்லது ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் சாட்சிகள் வேண்டும் என்ற கருத்தை இஸ்லாமிய நெறியியல் கூறுகிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! நாளை மற்றொரு அறிவியல் செய்தியை ஆராய்வோம்..!

‘கப்ளிசேட்’

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!