தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் செல்லும் கனிம வள வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புளியரை புனலூர் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவசர ஊர்தியான ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத ஒரு சூழல் ஏற்பட்டு வருவதாக தென்காசி மாவட்ட இயற்கை வள பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் செய்திக் குறிப்பில், புளியரை புனலூர் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கனரக வாகனங்கள் அளவுக்கு மீறி கனிம வளங்களை அதிகளவில் ஏற்றி செல்வதால் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. முன்பு மலைவழிச் சாலையில் 10 சக்கர வாகனங்களுக்கு மேல் இயங்கக் கூடாது என்ற உத்தரவு இருக்கும் போது இவ்வாறு போக்குவரத்து தடை ஏற்படுவது இல்லை. அந்த உத்தரவிற்கு தடை வாங்கப்பட்டதால் தான் இந்த நிலை ஏற்படுகின்றது.
ஆகவே மாவட்ட நிர்வாகம், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இருக்கின்ற போக்குவரத்து நெரிசலை போக்க உயர்நீதிமன்றத்தில் வாங்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை வள பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.