திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
உலகம் அழிந்தே தீரும்..!
அத்தியாயம் 27
யுகமுடிவு நேரம் வந்தேதீரும். ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ப கூலி கொடுக்கப்படுவதற்காக அதை மறைத்துவைத்துள்ளேன். (திருக்குர்ஆன் 20:15)
யுகமுடிவு நேரம் எப்போது வரும்?’ என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். “இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும்” என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “இதுபற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது” என்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை. (திருக்குர்ஆன் 7:187)
வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. யுகமுடிவு நேரம் எனும் நிகழ்ச்சி கண்மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன். (திருக்குர்ஆன் 16:77)
உலக அழிவைப் பற்றிய பல அடையாளங்களை ஹதீஸ்கள் அறிவித்துள்ளன. ஆனாலும் உலக அழிவு எப்போது நிகழும் என்ற அறிவு யாருக்கும் இல்லை. அல்லாஹ் ஒருவனே அந்த நிகழ்ச்சி நிரலை முழுமையாக அறிந்தவன்.
உலகின் நடைமுறைகளில் உலக அழிவைப்பற்றி பல கதைகளும், வதந்திகளும், உலவுகின்றன.
உலகில் ஏற்படும் புதிய புதிய கொள்ளைநோய்கள், அணு ஆயுதங்கள் உலகில் நச்சு வாயுக்களின் அதிகரிப்பால் ஓஸோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை, ஓஸோன் ஓட்டை மூலம் மிகப்பெரிய விண்கற்கள் பூமியைத் தாக்குவது, வெப்பத்தால் பனி மலைகள், பாறைகள் உருகி கடலின் நீர்மட்டம் உயர்ந்து நிலப்பரப்புகள் மூழ்கிவிடுவது, வெப்பநிலை 70 டிகிரி சென்டி கிரேடு அளவு உயர்ந்து மனிதர்கள் வாழ முடியாத சூழல் உருவாவது, அதீத குளிரால் உலகம் உறைவது என பல இயற்பியல் காரணங்கள் கூறப்பட்டாலும்,முழு பிரபஞ்சத்தின் அழிவு நாளை உறுதியாக விஞ்ஞானம் இதுவரை கூறவில்லை.
வானில் நடைபெறப்போகும் அழிவுகளை, சூரியன் ஒளியிழந்து மரணித்து விடும் நிகழ்வுகளை விஞ்ஞானம் சுட்டிக்காட்டுகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக இப்பிரபஞ்சம் தனது முக்கிய காலக்கட்டத்தை கடந்துவிட்டதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக வானவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். புதிய நட்சத்திரங்கள் உருவாவது படிப்படியாக குறைந்து விட்டதாக அவர்கள் கூறுகின்றனர். நட்சத்திரங்கள் அடிப்படையில் சூடான வாயுக்களால் ஆன ராட்சதப்பந்துகள். அவை அனைத்தும் ஒரே மாதிரியாகவே தங்கள் வாழ்க்கையை துவக்குகின்றன. நட்சத்திரங்களின் மையக்கரு கோடிக்கணக்கான டிகிரி அளவிற்கு வெப்பமடையும்போது,அதிலுள்ள ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக அழுத்தப்பட்டு ஹீலியமாக மாறுகின்ற “அணுக்கரு இணைவு”என்ற செயல்முறை நடைபெறுகிறது.
இது ஒளி மற்றும் வெப்பத்தை வெளியிடுகின்றது. இப்போது இது ஒரு நிலையான “முதன்மை வரிசை” கட்டத்தில் இருக்கும். நமது சூரியன் உட்பட பிரபஞ்சத்தில் 90% நட்சத்திரங்கள் முதன்மை வரிசை கட்டத்தில் இருக்கின்றன. இறுதியில் இந்த முதன்மை வரிசை கட்டத்தை அடையும் நட்சத்திரங்கள், எரியூட்டும் எரி பொருளை இழக்கின்றன. பின்னர் அவை மரணத்தை நோக்கி வெவ்வேறு பாதைகளில் பயணிக்கக்கூடும். நமது சூரியனை விட 200 மடங்கு நிறை(Mass) உள்ள நட்சத்திரங்கள் உள்ளன. சூரியனைப்போன்ற குறைந்த நிறை(Mass) கொண்ட நட்சத்திரங்கள், பில்லியன் கணக்கான ஆண்டுகளில் மெல்ல மெல்ல மங்கி மறைந்துவிடுகின்றன. சூரியனை விட எட்டு மடங்கு நிறை கொண்ட பிரமாண்டமான நட்சத்திரங்கள், சூப்பர் நோவா என்னும் மிகப்பெரிய வெடிப்பு நிகழ்வுக்கு உள்ளாகி வெடித்து சிதறுகின்றன.கடந்த 2013 ஆம் ஆண்டு நட்சத்திரங்களின் போக்குகளை ஆய்வு செய்த அறிவியலாளர்கள் குழு,இனி உருவாகப்போகும் நட்சத்திரங்களில் 95% ஏற்கனவே உருவாகிவிட்டதாக கூறுகின்றனர். நாம் பழைய நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தும் பிரபஞ்சத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று இந்த ஆய்வுகளின் முதன்மை ஆசிரியர் டேவிட் சோப்ரல் கூறியுள்ளார். பிரபஞ்சத்தின் கால வரிசையில், காஸ்மிக் நூன் என்று அழைக்கப்படும் சுமார் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நட்சத்திர உருவாக்கம் உச்சத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அண்டங்கள் வாயுக்களை, நட்சத்திரங்களாக மாற்றுகின்றன. ஆனால் இப்போது குறைவான விகிதத்திலேயே இது நடைபெறுவதாக கூறப்படுகிறது. பிரபஞ்சம் ஒருநாள் முடிவுக்கு வரும்.அதற்கு “வெப்பமரணம்” மற்றும் பிக் ஃபிரீஸ் (Big freeze – மகா உறைநிலை) காரணமாக அமையலாம் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். பிரபஞ்சம் விரிவடையும் போது, தொடர்ந்து ஆற்றல் பரவி இறுதியில், உயிர்கள் வாழமுடியாத அளவிற்கு குளிர்ச்சி அடையும் என்றும் கூறுகிறார்கள். நட்சத்திரங்கள் ஒன்றை விட்டு ஒன்று விலகி தூரமாக செல்லும்.அப்போது எரிபொருள் தீர்ந்து புதிய நட்சத்திரங்கள் உருவாகாது. பிரபஞ்சத்தின் முடிவு என்பது நிச்சயம் என்றும், அதற்கு ஒன்றுக்கு பின்னால் 78 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளும் அளவு காலமாகும் என்றும் கூறுகிறார்கள். இதுபோன்ற அறிவியல் கூற்றுக்கள், பிரபஞ்சம் நிச்சயமாக அழியும் என்றும் கூறினாலும்,அது அழியும் கால அளவுகளை சரியாக கணித்து சொல்லவில்லை. இருப்பினும், கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கி செல்லும் பிரபஞ்சம், திடீரென ஒரு வினாடியில் அழிந்துவிடலாம். திருக்குர்ஆன் கூறுவது போல, அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது.காலத்தின் அளவுகோலை அல்லாஹ்வே அறிந்தவன்.
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! நாளை மற்றொரு செய்தியை ஆராய்வோம்..!
‘கப்ளிசேட்’




You must be logged in to post a comment.