18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஒரு கோடி வாக்குகள் நீக்கம்!மோடி அரசின் வாக்குப் பறிப்பு மோசடியை முறியடிப்போம்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

ஒரு கோடி வாக்குகள் நீக்கம்!மோடி அரசின் வாக்குப் பறிப்பு மோசடியை முறியடிப்போம்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

எழுதியவர்: Askar December 22, 2025, 5:59 pm

ஒரு கோடி வாக்குகள் நீக்கம்!
மோடி அரசின் வாக்குப் பறிப்பு மோசடியை முறியடிப்போம்!-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!


தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டிருக்கும் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே எச்சரித்தது போல சுமார் ஒரு கோடி வாக்குகள் நீக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் கைப்பாவை ஆகிவிட்டத் தேர்தல் ஆணையம் செயல்படுத்தும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் ( எஸ்.ஐ.ஆர்) என்பதே வாக்குரிமையைப் பறிப்பதற்கான சதிதான் என்று தொடர்ந்து எச்சரித்து வந்தோம். அது இப்போது உண்மையாகி உள்ளது.

வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு வாக்குரிமைப் பறிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை எஸ்.ஐ.ஆர் நடத்தப்படும் 12 மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் அதிகம். இதிலிருந்தே சனாதனவாதிகள் தமிழ்நாட்டைக் குறிவைத்து களம் இறங்கியிருப்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் நீக்கம் செய்யப்பட்டுள்ள 97.37 இலட்சம் வாக்காளர்களில் இதில் இறந்து போனவர்கள், இரு முறை பதிவானவர்கள் என்பதைத் தவிர்த்து 66 லட்சம் பேர் அவரவர் முகவரியில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ானால், அவர்கள் தகுதியுள்ள வாக்காளர்களேஆவர். அவர்களுடைய வாக்குகளைப் பட்டியலிலிருந்து நீக்கம் செய்வது சட்டத்துக்குப் புறம்பானதாகும். எனவே, இடமாற்றம் செய்யப்பட்டு குறிப்பிட்டமுகவரியில் இல்லையென நீக்கம் செய்யப்பட்டுள்ள 66 இலட்சம் வாக்காளர்களையும் மீண்டும் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.

மோடி அரசாங்கம் 2021 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, வாக்காளர் அடையாள அட்டைகள் அனைத்தும் ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டன. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் அல்ல என்று அந்நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் அந்தத் தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே ஒட்டுமொத்த வாக்காளர்களுடைய அடையாள அட்டைகளும் ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டு விட்டன. எனவே, இப்போது முகவரி மாறிச் சென்றிருக்கிறவர்கள் என்று நீக்கம் செய்யப்பட்டுள்ள 66 இலட்சம் பேர்களின் வாக்காளர் அட்டைகளும் ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பதால் அவர்களது ஆதார் அட்டைகளும் ரத்தாகும் ஆபத்து உள்ளது. இது வாக்குரிமையோடு சேர்த்துக் குடியுரிமையையும் ரத்து செய்வதாகும். இதைப்பற்றித் தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும்.

இறந்து போனவர்களெனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளவர்களில், பலர் உயிரோடிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன. அதுபோலவே ஒரு வாக்குச் சாவடியில் பதிவு செய்திருப்பவர்களைத் தேர்தல் அதிகாரிகள் நீக்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. மாஞ்சோலையில் பதிவு செய்திருந்த 1857 வாக்குகள் புலம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள் என்ற தவறான காரணம் கூறி அதிகாரிகளால் நீக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் எஸ்சி வகுப்பைச் சேர்ந்தவர்களாவர்.

தகுதிவாய்ந்த வாக்காளர்களை நீக்குவது, பாஜகவுக்கு சாதகமாகப் போலி வாக்காளர்களை சேர்ப்பது என்ற தந்திரத்தின் மூலம்தான் பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதே தந்திரத்தைப் பயன்படுத்தித் தமிழ்நாட்டிலும் ஆட்சியைப் பிடிக்கலாமென பாஜக நினைத்துக்கொண்டுள்ளது. இந்த சதித் திட்டத்தை முறியடிப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் இன்னபிற சனநாயக சக்திகளும் முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!