17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

எழுதியவர்: Askar December 11, 2025, 9:04 am

திருக்குர் ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

குகைவாசிகள் நீண்ட உறக்கத்திற்கு பின் எழுதல்.!

அத்தியாயம் 4


“அவர்கள் தங்கிய காலத்தை இருசாராரில் நன்கறிந்தவர் யார் என்பதை அறிவிப்பதற்காகப் பின்னர் அவர்களை எழுப்பினோம்..!” (அல்குர்ஆன் 18:12)

குகைவாசிகள் 300 அல்லது‌ 309 ஆண்டுகள் தூங்கியதாக சில மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் நீண்ட ஆண்டுகள் தூங்கினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

குகைவாசிகளின் எண்ணிக்கையிலும் அவர்களுடன் சென்ற நாயையும் சேர்த்து 4,6,8 என்று மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. அல்லாஹ்வே சரியான எண்ணிக்கையை அறிந்தவன். இந்த சம்பவம் அல்லாஹ்வின் ஆற்றலை விளக்குவதால், எண்ணிக்கை போன்றவைகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. குகைவாசிகள் தூங்கும்போது அவர்களைப் பார்த்தால் அச்சமடைந்து வெருண்டு ஓடுவீர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஏனெனில் சிலர் விழித்துக் கொண்டே தூங்குவார்கள்.அதுபோலவே குகைவாசிகளும், விழித்திருப்பவர் களைப்போலவே கண்களை சிமிட்டிக்கொண்டே தூங்கினார்கள் என்று கருதலாம். ஒருவர் நீண்டநாட்களாக கண்களை மூடிக் கொண்டே இருந்தால், காட்சிகளை மூளைக்கு எடுத்து செல்லும் நரம்புகள் (Optical nerves) செயலற்றுப் போய் சுருங்கிவிடும்.

இதனால் பார்வைபோய் கண்கள் குருடாகிவிடும். அவர்கள் கண்களைத் திறந்தால் எதையுமே பார்க்க முடியாது.

விழியின் வெண்படலத்திற்கு இரத்த நாளங்கள் இல்லை.எனவே இவைகள் கண்ணீர் சுரப்பிகளால் அவ்வப்போது ஈரப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். எனவே,கண்களை நீண்ட நேரத்திற்கு திறந்தே வைத்திருந்தால் விழிவெண்படலம் வறண்டு போக நேரிடும். நாளடைவில் “கார்னியோ செராசிஸ்”(carneo- xerosis)என்னும் பாதிப்பால் குருட்டுத்தன்மை ஏற்படும். ஒருவர் நீண்ட நாட்களாக கண்களை திறந்து வைத்திருந்தாலும் அல்லது கண்களை மூடியே வைத்திருந்தாலும் குருட்டுத்தன்மை (Blindness) ஏற்படும் என்பது நவீன கண்மருத்துவம் கூறும் செய்தியாகும். அதேபோல் ஒரே இடத்தில் படுத்தே இருந்தாலும் ரத்த ஓட்டம் தடைபட்டு புண்கள் ஏற்பட்டு உடல்‌ அழுகிவிடும் என்பதும் நாம் அறிந்த செய்தியாகும். ஆகவே குகைவாசிகளை ஒரே நிலையில் வைக்காமல் வலப்புறமும், இடப்புறமும் புரட்டி அவர்கள் உடலை‌ அல்லாஹ் பாதுகாத்து கடைசியில் அவர்களை விழிக்கச் செய்கிறான். இது இறைவனின் ஆற்றலை‌ இன்றைய மருத்துவ விஞ்ஞானத்தோடு புரிந்து கொள்ளும் திருக்குர்ஆன் கூறும் குகைவாசிகள் வரலாறாகும். அவர்கள் விழித்தெழுந்து‌ தாங்கள் தூங்கியது ஒரு சில மணிகளா? ஒருநாளா? என்றெல்லாம் நினைத்துக் கொண்டு, குகையின் வாசலில் இருந்த தங்களின் நாயின் எலும்புக் கூட்டை கண்டு திடுக்கிட்டு, தாங்கள் கொண்டுவந்த உணவு கெடாமல் இருப்பதை அறிந்து கொண்டதும், பக்கத்து நகருக்கு சென்று பொருள்கள் வாங்க கொடுத்த வெள்ளி நாணயம் செல்லாததாக ஆனதும் ஊரே அடியோடு மாறியிருப்பது கண்டும் ஆச்சரியப்பட்டபோது அல்லாஹ்வின் ஆற்றல் புரிந்தது. ஜெருசலத்தில் இருந்த பாதிரியார்கள் ஒரு குழுவை ஏற்படுத்தி “கும்ரான் மலைப்பகுதிகளில்” இருந்த குகைகளில் தேடி தேடி மீதமிருந்த அனைத்து சாசனச் சுருள்களையும் தங்கள் கைவசம் கொண்டுவந்து மற்றவர்கள் படிக்க முடியாமல் தடுத்து வைத்திருந்தனர். சாசனச்சுருளில் உள்ள செய்திகளை உலகின் அறிஞர்கள் படிக்க முடியாமல் தடுத்ததில்‌ வாடிகன் போப்பாண்டவர் சபை முன்னணியில் இருந்தது. அமெரிக்க லாஸ் ஏஞ்சலஸ் நகரின் ஒரு நூலகத்திற்கு பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்ட சுருள்களை அதன் தலைவராக இருந்த ஐஸ்மேன் என்ற அறிஞர் அவைகளை பெரிய புகைப்படங்களாக எடுத்து அவைகளை படித்தபோது அதிர்ந்து போனார். ஈசா நபியை பின்பற்றிய அந்த நல்லடியார்கள், தங்களுடன் குகைக்குள் எடுத்துச்சென்ற இன்ஜீல் வேதத்தின் பகுதிகளே அந்த சாசனச்சுருள்கள் என்றும்,பிறகு வந்த திருகுர்ஆனின் கருத்துக்கள் அதை உண்மை படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

திருக்குர்ஆனின் அந்தக்குகைக்கும் “ஏட்டுக்கும் உரியோர்” என்ற வசனத்தின் பொருள் இப்போது நமக்கு விளங்குகிறது. பிறகு வந்த “பவுல் என்னும் துறவி” (Saint Paul) ஏராளமான இடைச் சொருகல்களை செய்து மதகுருமார்கள் பயனடையும் விதத்தில் மாற்றி எழுதப்பட்டதே இன்றைய பழைய ஏற்பாடும்(தோரா), புதிய‌ஏற்பாடும் (பைபிளும்)ஆகும். தங்களின் கலப்புகள் தெரிந்துவிடும் என்பதாலேயே “சாக்கடல் சாசனங்களை” மதகுருமார்கள், மற்ற எல்லோரையும் படிக்க விடாமல் தடுத்தாலும், அது உண்மைத் தன்மையோடு வெளிப்பட்டு திருக்குர்ஆனின் கருத்தை வலுப்படுத்துகிறது.

அதன் காரணமாகவே மேற்குலகம் இன்று இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் வீழ்த்த நினைக்கிறது. உண்மை எப்போதும் தோற்காது.

திருக்குர்ஆனின் ஒளியில், நாளை மற்றொரு அறிவியல் ஆச்சரியத்தை ஆராய்வோம்…!

“கவிஞர் கப்ளிசேட்” 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!