வத்தலக்குண்டு தக்காளி சந்தையில் தொடர் மழை காரணமாக, வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை கடும் உயர்வு. ஒரு கிலோ ரூ 90-க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி. அனைத்து காய்கறிகள் விலையும் உயர்வு.
வத்தலக்குண்டு தக்காளி சந்தையில் தொடர் மழை காரணமாக, வரத்து குறைந்துள்ளதால், தக்காளி விலை கடும் உயர்ந்துள்ளது. இதனால், சனிக்கிழமை ஒரு கிலோ தக்காளி ரூ 90-க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு நிலக்கோட்டை பகுதிகளில் தக்காளி விளைச்சல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகமாக இருக்கும். வத்தலக்குண்டு தக்காளி மார்கெட்டில் தினந்தோறும் 50 டன் வரை தக்காளி விற்பனைக்கு வரும். மேலும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து அதிகமாக இருக்கும். ஆனால், இந்த தக்காளி சீசனில் வரத்து குறைந்து விட்டதால், தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை, மற்றும் அதிகமான பனிப்பொழிவால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
25 கிலோ எடை கொண்ட ஒரு தக்காளி பெட்டி ரூ 2000 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால், தக்காளி மார்க்கெட் வந்த சில்லறை வியாபாரிகள் குறைந்த அளவே தக்காளி வாங்கிச்சென்றனர்.
சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ 90 வரை இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர் மழை காரணமாக, காய் கனி விளைச்சல் குறைந்துள்ளதால், வத்தலகுண்டு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவாக இருந்தது. இதனால், பட்டர் பீன்ஸ் ரூ 250-க்கும், சோயா பீன்ஸ் ரூ-200 க்கும், பச்சை பட்டாணி ரூ 300-க்கும், காரட் ரூ 100-க்கும், முருங்கை பீன்ஸ் ரூ 160-க்கும், முள்ளங்கி ரூ 100-க்கும் முருங்கைக்காய் ரூ 250-க்கும் விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் வேதனை அடைந்தனர். வத்தலகுண்டு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளும் விலை உயர்ந்துள்ள நிலையில் தக்காளியும் தினந்தோறும் விலை உயர்ந்து வருவதால், வியாபாரிகளும் பாதிப்பு அடைந்துள்ளனர். தொடர்ந்து காய்கனி விலைகள் உயரும் என, கூறப்படுகிறது.




You must be logged in to post a comment.