17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்; எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்; எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..

எழுதியவர்: Askar October 31, 2025, 5:58 pm

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்குவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கட்சியின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக செங்கோட்டையன் செயல்படுவதாகக் கூறி, அவரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏ செங்கோட்டையனை, இன்றுமுதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்’’ எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அவரை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அறிவித்திருந்தார்.

அதிமுகவிலிருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர், வியாழக்கிழமை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவுக்கு ஒன்றாகச் சென்ற நிலையில், இன்று செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, செய்தியாளர் சந்திப்பின்போது, அதிமுகவிலிருந்து தன்னை நீக்கிவிட்டால் மகிழ்ச்சி என்றும் செங்கோட்டையன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!