17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மதவாத பிரச்சினையை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி!-மத்திய அரசு குற்றச்சாட்டு..

மதவாத பிரச்சினையை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி!-மத்திய அரசு குற்றச்சாட்டு..

எழுதியவர்: Askar May 9, 2025, 8:22 pm

ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தனர்.

கர்னல் சோபியா குரேஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்க பாகிஸ்தான் முயற்சித்தது. பாகிஸ்தான் படைகள் இந்திய எல்லைகளில் அதிக அளவில் தாக்குதல் நடத்தி உள்ளது. பயணிகள் பயன்படுத்தும் விமானங்களை பாகிஸ்தான் கேடயமாக பயன்படுத்தியது. 8-ம் தேதி இரவு 300 முதல் 400 டிரோன்கள் பயன்படுத்தி, 36 இந்தியப் பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்தது. அவற்றை இந்தியா வழிமறித்து அழித்தது. சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்கள் மூலம் பல தகவல்களை சேகரித்து வருகிறோம்.

பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட டிரோன்கள் ஆயுதமின்றி கேமராக்களுடன் வந்தன. சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன் விமானங்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை. எல்லைக்கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறல் தொடர்கிறது. கனரக ஆயுதங்களை பயன்படுத்தி ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. இந்தியாவின் பதிலடி தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. உளவு தகவல்களை சேகரிக்கவே மிகப்பெரிய அளவில் பாகிஸ்தான் ஊடுருவியுள்ளது என்று கூறினார்.

அதனை தொடர்ந்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:-

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதுடன் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்தது. வழிபாட்டு தலங்களை தாக்கவில்லை என பாகிஸ்தான் பொய் சொல்கிறது. மதவாத பிரச்சினையை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சிக்கிறது. பூஞ்ச் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை பாகிஸ்தான் தாக்கியது. இதில் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். குழந்தைகளின் பெற்றோர் காயமடைந்துள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர் நிலைமை பற்றி அமெரிக்காவிடம் எடுத்துரைத்தோம். பாகிஸ்தானின் தாக்குதல் திட்டம் இந்தியாவிடம் ஒருபோதும் பலிக்காது. ஒட்டுமொத்த இந்தியாவும் பாகிஸ்தானுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளது. அமெரிக்காவிடம் ஆபரேஷன் சிந்தூர் பற்றி எடுத்துரைத்துள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவுடன் ஆலோசித்து வருகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தருவதாக உறுதி அளித்துள்ளது. பாகிஸ்தான் முயற்சி ஒருபோதும் பலிக்காது. உலக நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக கர்தார்பூர் வான் வழித்தடம் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது. பாகிஸ்தானுக்கு செல்லும் நிதியுதவிகளை நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. சர்வேதச நாணய நிதியத்திடம் பேசப்படும்.

பூஞ்ச் பகுதியில் குருத்வார் ஒன்றை பாகிஸ்தான் தாக்கியது. சீக்கிய வழிபாட்டு தலங்களை இந்தியா தாக்குவதாக பாகிஸ்தான் வதந்தி பரப்புகிறது. நமது நாட்டின் மீது நாமே தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறுவது அப்பட்டமான பொய். பாகிஸ்தான் ராணுவத்தின் செயல் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் உள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!