17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானை பண்ணவயல் கிராமத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா..!

திருவாடானை பண்ணவயல் கிராமத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா..!

எழுதியவர்: Baker BAker May 8, 2025, 12:24 pm

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகில் அமைந்துள்ள பண்ணவயல் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் இருந்து வருகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முத்துமாரியம்மன் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன்  மங்களகரமாகத் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்,  மலர் அலங்காரம், தீபாராதனை போன்றவை  பக்தி சிறப்புடன் நடைபெற்றன.

மேலும், ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் கிராம மக்கள் ஒன்றுகூடி கும்மி, கோலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்ந்தனர். குறிப்பாக பெண்கள்  கும்மி அடித்து அம்மனை வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பத்தாம் நாள் திருவிழாவான இன்று பக்தர்கள் விரதமிருந்து வீடுகளில் பக்தியுடன் வளர்த்த  முளைப்பாரிகளை தங்கள் தலையில் சுமந்து வீதி உலா வந்தனர். இந்த முளைப்பாரி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.வண்ணமயமான புத்தாடைகள் அணிந்து முளைப்பாரிகளை தலையில் சுமந்தவாறு பக்தர்கள் திருவாடானையிலிருந்து ஓரியூர் செல்லும் சாலையில் ஊர்வலமாகச் சென்றனர். அங்கிருந்து கண்மாயை அடைந்து முளைப்பாரிகளைகங்கையில் கரைத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த முளைப்பாரி கரைக்கும் நிகழ்வில் கிராம மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர். திருவிழாவினை முன்னிட்டு கோவில்  வளாகம்  முழுவதும்  வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் போல் காட்சியளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழா பண்ணவயல் கிராம மக்களின் ஒற்றுமையையும், பக்தியையும் வெளிப்படுத்தும் விதமாக  சிறப்பாக  அமைந்திருந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!