17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மக்களை காப்பாற்ற தீவிரவாதிகளை வீரத்துடன் எதிர்கொண்ட செய்யது ஆதில் ஹசன் என்ற உள்ளூர் குதிரை ஓட்டும் இளைஞர்: தீவிவாதிகளால் கொடூரமாக சுட்டுக் கொலை..

மக்களை காப்பாற்ற தீவிரவாதிகளை வீரத்துடன் எதிர்கொண்ட செய்யது ஆதில் ஹசன் என்ற உள்ளூர் குதிரை ஓட்டும் இளைஞர்: தீவிவாதிகளால் கொடூரமாக சுட்டுக் கொலை..

எழுதியவர்: Askar April 23, 2025, 5:11 pm

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பயங்கரவாதியை எதிர்த்துப் போராடிய குதிரை சவாரி செய்த ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்தில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டியிலிருந்து தப்பிக்கச் சுற்றுலாப் பயணிகள் தத்தளித்தபோது, குதிரை சவாரி செய்யும் ஒருவர் பயங்கரவாதிகளில் சுற்றுலாப் பயணிகளை காப்பாற்ற அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்தினார்.

பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் குதிரை சவாரி தொழில் செய்துவந்தவர் சையத் ஆதில் ஹூசேன் ஷா. இவர் சம்பவத்தன்று துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவனின் துப்பாக்கியைப் பறித்து, தாக்குதலை முறியடிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகப் பயங்கரவாதியின் துப்பாக்கிச்சூட்டில் குண்டு அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

ஹூசேன் ஷாவின் வயதான பெற்றோர், மனைவி, குழந்தைகள் என அவரது குடும்பமே அவரது வருமானத்தை நம்பியே பிழைத்து வந்தனர். இந்தநிலையில் ஹூசேனின் மரணம் குடும்பத்தையே நிலைகுலுங்க வைத்துள்ளது.

பயங்கரவாதத் தாக்குதலில் என் மகனை இழந்துவிட்டேன். மகனின் மரணம் குடும்பத்திற்கே பேரிழப்பாக மாறியுள்ளது என்று அவருடைய தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

மகனின் மரணம் குறித்து அவரது தந்தை சையத் ஹைதர் ஷா கூறுகையில்,

என் மகன் வழக்கம்போல் நேற்று மாலை 3 மணியளவில் பெஹல்காமுக்கு வேலைக்காகச் சென்றிருந்தான். தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டு அவனைத் தொடர்புகொண்டோம். ஆனால் அவனின் தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. மீண்டும் மாலை 4.40 மணிக்கு அவனது தொலைபேசி இயக்கப்பட்டது. ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை. உடனே நாங்கள் காவல் நிலையத்திற்கு விரைந்தோம். அப்போதுதான் தாக்குதலில் அவன் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விளைவுகளை எதிர்கொண்டே ஆக வேண்டும் என்று அவர் கூறினார்.

குதிரை ஓட்டியின் மரணம் அந்த குடும்பத்தைப் பெருமளவில் பாதித்துள்ளதோடு, குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!