17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும்: மத்திய அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்..

வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும்: மத்திய அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்..

எழுதியவர்: Askar April 16, 2025, 5:10 pm

வக்ஃபு சட்டத்தில் மட்டும் புதிய நடைமுறை ஏன் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இந்து வாரியங்களில் இஸ்லாமியர்களை நியமிப்பீர்களா என்றும் கேள்வியை முன்வைத்துள்ளது.

 மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு திருத்த மசோதா இஸ்லாமியர்களின் உரிமையை பறிப்பதாகக் கூறி காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் மக்களவை, மாநிலங்களவையில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு மசோதா நிறைவேறியது. குடியரசுத் தலைவர் ஒப்புதலைத் தொடர்ந்து வக்ஃபு திருத்தச் சட்டம் அமலானது. ஆனால் வஃக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக, சிபிஐ,  உள்பட 79 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “ஒருவர் ஐந்து வருடங்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றினால் மட்டுமே வக்ஃபு நன்கொடை வழங்க முடியும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. வக்ஃபு சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.அதேபோல மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “ஐந்து ஆண்டுகள் மதத்தை பின்பற்றினால்தான் நன்கொடை வழங்க முடியும் என்பது ஏற்புடையது அல்ல” என்று வாதிட்டார். கபில் சிபலும் ஆஜராகி, “வக்ஃபு திருத்த சட்டத்தில் உள்ள அம்சங்கள் அனைத்தும் எதிர்மறையாக உள்ளது. இஸ்லாமிய மத உரிமைகளில் தலையிட மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை” என்று வாதிட்டார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், “இந்து அறநிலையத் துறை சட்டத்தின் படி இந்துக்கள் மட்டுமே அதனை நிர்வகிக்க முடியும். வக்ஃபு சட்டத்தில் மட்டும் புதிய நடைமுறை ஏன்?” என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு தரப்பில், “நாடாளுமன்ற கூட்டுக் குழு ஊர் ஊராக சென்று கருத்து கேட்ட பின்னரே சட்டம் இயற்றப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளை வாரியங்களில் நியமிப்பீர்களா, வக்ஃபு சொத்து எது என்பதை ஆட்சியாளர்கள் முடிவு செய்வது நியாயமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வக்ஃபு வாரியத்தில் இஸ்லாமியர்களே உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். இந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!