17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கருப்பாநதி அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி..

கருப்பாநதி அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி..

எழுதியவர்: Abubakker Sithik January 1, 2025, 12:26 am

கருப்பாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரால் தண்ணீர் திறந்து விடப்பட்டது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக முதல்வர் ஆணையின் படி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கருப்பாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து பசலி பிசான பருவ சாகுபடிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் 31.12.2024 அன்று தண்ணீர் திறந்து வைத்தார்.

கருப்பாநதி பாசன திட்டத்தின் கீழுள்ள பெருங்கால், பாப்பான்கால், சீவலன் கால், இடைகால், கிளாங்காடு, ஊர்மேல் அழகியான் ஆகிய கால்வாய்களின் கீழ் உள்ள 9514.70 ஏக்கர் நேரடிப் பாசன மற்றும் மறைமுகப் பாசன நிலங்களுக்கு நடப்பாண்டு பிசான பருவ சாகுபடிக்கு கருப்பாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து 31.12.2024 முதல் 31.03.2025 வரை 91 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 25 கனஅடி வீதம் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படும்.

 

இதன் மூலம் வைரவன் குளம், கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, குமந்தாபுரம், போகநல்லூர், கடைய நல்லூர், இடைகால், கிளாங்காடு, கம்பநேரி கிராமம், பொய்கை, திருமலாபுரம், சேர்ந்தமரம், குலசேகர மங்கலம், வீரசிகாமணி உள்ளிட்ட 14 கிராமங்கள் பயன் பெறும். எதிர் வரும் நாட்களில் வடகிழக்கு பருவ மழையினால் மேலும் அணையில் நீர்வரத்து அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் நீர்த்தேக்கத்தில் எதிர் வரும் நாட்களில் பருவமழை பொய்த்து எதிர் பார்க்கின்ற நீர்வரத்து கிடைக்கப் பெறவில்லை என்றால் இருக்கும் நீரை அனுமதிக்கப் பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்படும் எனவும், நீரை சிக்கனமாக பயன்படுத்தவும், நீர் விநியோகப் பணியில் நீர்வளத் துறைக்கு ஒத்துழைப்புத் தருமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இந்த நிகழ்ச்சியில் செயற் பொறியாளர் (நீர்வளம் ஆதாரத்துறை) தனலெட்சுமி, உதவி செயற் பொறியாளர் (நீர்வளம் ஆதாரத் துறை) சுப்பிரமணிய பாண்டியன், உதவிப் பொறியாளர்கள் (நீர்வளம் ஆதாரத் துறை) சரவணக் குமார், உதய குமார், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!