17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தென்காசி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை; மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை..

தென்காசி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை; மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை..

எழுதியவர்: Abubakker Sithik December 13, 2024, 8:49 am

தென்காசி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவு கனமழை பெய்துள்ளது எனவும், ஒரே நாளில் 1345 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகி உள்ளதாகவும் தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆற்றுப்படுகை ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும், நீர்நிலைகள் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார்.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களான அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம், குண்டாறு நீர்த்தேக்கம், கருப்பாநதி நீர்த்தேக்கம், கடனாநிதி நீர்த்தேக்கம், ராமநதி நீர்த்தேக்கம் உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களிலும் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், நீர்நிலைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ராமநதி அணையானது தற்போது தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பும் தருவாயில் உள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 650 கன அடிக்கு மேல் நீரானது வெளியேற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கையானது அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒலி பெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கிகள் வாயிலாக ராமநதி ஆற்றுப்படுகை கரையோரம் வசித்து வரும் மக்களுக்கு தற்போது விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை சுமார் 1,345 மில்லி மீட்டருக்கு மேலாக வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதன்படி, தென்காசி சுற்றுவட்டார பகுதியில் அதிகபட்சமாக 215 மில்லி மீட்டர் மழைப்பொழிவும், ராமநதி அணைப்பகுதியில் 198 மில்லி மீட்டர் மழைப் பொழிவும், குண்டாறு அணைப்பகுதியில் 160 மில்லி மீட்டர் மழைப்பொழியும், செங்கோட்டை சுற்று வட்டார பகுதியில் 170 மில்லி மீட்டர் மழைப் பொழிவும், ஆய்க்குடி சுற்றுவட்டார பகுதியில் 147 மில்லி மீட்டர் மழைப்பொழிவும், சங்கரன் கோவில் சுற்றுவட்டார பகுதியில் 132 மில்லிமீட்டர் மழை பொழிவும் என ஒட்டுமொத்தமாக அதிகாலை 4.30 மணி வரை மாவட்டத்தில் 1,345 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!