சமீபத்தில் மூன்றாம் உலகப்போர் நடந்தால் அதற்கு முக்கிய காரணம் தண்ணீராகத்தான் இருக்கும் என்பதை பார்க்க நேர்ந்தது, சிந்திக்கவும் வைத்தது. ஏனென்றால் சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் உள்ள கேப் டவுன் எனும் நகரம் “DAY ZERO” எனும் நீரில்லா நிலையை அறிவித்துள்ளது. “DAY ZERO” என்பது அரசாங்கம் வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு ரேசன் முறையில் வழங்கப்படும். இந்த பட்டியலில் இந்தியாவில் உள்ள பெங்களூரும் உள்ளது, அதைத் தொடர்ந்து பெய்ஜிங், டோக்யோ, மாஸ்கோ, மியாமி, இஸ்தான்புல் போன்ற பல நாடுகள் இந்த “DAY ZERO” நிலையை 2025ம் ஆண்டுக்குள் சந்திக்க நேரிடும் என அறிக்கை தெரிவிக்கிறது. அதே சமயம் இந்த அறிக்கை இதற்கு காரணம் முறையான நீர் மேலான்மை திட்டம் இல்லாதது தான் என்பதையும் சுட்டி காட்டுகிறது.
இந்த நிலை கீழக்கரை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் உருவாக தூரம் அதிகமில்லை. சமீப காலமாக கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. குடிநீர் விலை கொடுத்து வாங்கப்படுகிறது. கிணற்று நீர் வற்றிப்போய் கிணற்றுக்குள் 20 அடிக்கு மேல் (போர்) துளை போட்டு நீர் எடுக்கப்படுகின்றது. இதுவும் எவ்வளவு ஆழம் போகும், எத்துணை நாட்கள் தாங்கும் என்று தெரியவில்லை.
மழை இல்லை அதனால் கிணற்றில் தண்ணீர் இல்லை என்று மக்கள் நம்ப வைக்கப்படுகின்றனர், ஆனால் உண்மையில், இந்த திடீர் தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம் கீழக்கரையை சுற்றியுள்ள பகுதிகளான சின்ன மாயாகுளம், நெய்னாரப்பா தர்ஹா, மங்களேசுவரி நகர் போன்ற பகுதிகளில் இருக்கும் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் “சலங்கை மணல்” என்று கூறப்படும் மணலை அரசு அனுமதித்த 3.5 அடி ஆழத்தை விட அளவுக்கு அதிகமாக 30,40 அடிக்கு மேல் தோண்டி அள்ளியதே காரணம்.
இப்பகுதிகள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் எந்த எதிர்ப்பும் இன்றி கடுமையாக மணல் வலம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இந்த மணல் குவாரிகளுக்கு சமீபத்தில் அரசு மீண்டும் அனுமதி கொடுத்துள்ளது.
இதனால் ஏற்கனவே முறைகேட்டில் ஈடுபட்ட அதே நபர்கள் பினாமிகள் மூலம் தற்பொழுது முன்பைவிட அளவுக்கு அதிகமாக JCB இயந்திரங்களை பயன்படுத்தி அசுரவேகத்தில் மணல் மேடுகளை சூரையாடிவருகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு குவாரியில் இருந்து மட்டும் 100 டிராக்டர்களில் மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் கீழக்கரை மனிதர்கள் வாழத் தகுதி இல்லாத பாலைவனமாக மாறிவிடும் நிலையே உள்ளது.
இது சம்பந்தமாக கீழக்கரை மக்கள் நல சங்க செயலாளர் MMK.ஜமால் இபுராஹிம் கூறுகையில் “இது சம்பந்தமாக அரசு அதிகாரிகளுக்கு புகார் மனுக்களை அனுப்பியுள்ளோம், அதே சமயம் கீழக்கரையில் உள்ள அனைத்து ஜமாத் நிர்வாகங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். இது சம்பந்தமாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடில் சட்ட ரீதியான நடவடிக்கையை முன்னெடுப்போம்” என்று ஆதங்கத்துடன் கூறினார்.
——-///—————//////——————————–///









You must be logged in to post a comment.