17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் 12 பேருக்கு உயர்நீதிமன்றம் பரோல் வழங்கி உத்தரவு! – எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் 12 பேருக்கு உயர்நீதிமன்றம் பரோல் வழங்கி உத்தரவு! – எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு

எழுதியவர்: syed abdulla January 11, 2024, 11:17 pm

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;


தமிழக சிறைச்சாலைகளில் உள்ள 33 நீண்டநாள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை, அரசின் கருணை அடிப்படையிலான விடுதலை நடவடிக்கையில் பாரபட்சம் பாராமல் விடுதலை செய்ய வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட பல அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றது. மதுரையில் நடந்த மாநாட்டிலும் தமிழக அரசை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், ஆளுநர் ஒப்புதல் வழங்குவதற்கு தாமதமாகும் பட்சத்தில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை கடந்த சிறைக்கைதிகளை மாநில அரசே பரிசீலனை செய்து விடுதலை தொடர்பான உத்தரவினை அறிவிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி, குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 432 (5) யின் படி தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த தீர்மானம் மூலம் வலியுறுத்தியது.

மேலும், 33 முஸ்லிம் ஆயுள் சிறைக்கைதிகளில் 20 பேரை மட்டும் விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. அதுவும் கிடப்பில் உள்ள நிலையில், எஞ்சியுள்ள 13 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

இந்த 13 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அறிவுரைக் குழு மறுத்து உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த 13 பேரும் உயர்நீதிமன்றத்தை நாடினர். இன்றைய தினம் அவர்களின் 12 பேர் நீதிமன்றம் மூலமாக சாதாரண விடுப்பினை பெற்றுள்ளனர்.

இதுவரையில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை அல்லது பரோல் விடுப்பு என்பது நீதிமன்றம் மூலமாக மட்டுமே கிடைத்துள்ளது.

ஆகவே, நீதிமன்ற நிவாரணங்களை கடந்து, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை மற்றும் பரோல் விடுப்பை மாநில அரசே சாத்தியப்படுத்த தமிழக அரசு போதுமான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.

ஒரு பக்கம் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்காக நடவடிக்கை மேற்கொள்ளும் நிலையில், மறுபக்கம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அறிவுரைக் குழு அதற்கு தடையாக இருக்கின்றது என்பது ஏமாற்றும் செயலாக தெரிகின்றது.

ஆகவே, இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கை ஏமாற்றும் வகையில் கண்துடைப்பாக இல்லாமல், அனைத்து ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையை மாநில அரசே உறுதிபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, இந்த விவகாரத்தில் கடைசி ஆயுள் சிறைவாசி விடுதலை செய்யப்படும் வரை எஸ்.டி.பி.ஐ. கட்சி அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!