17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்; தென்காசி எம்எல்ஏ வலியுறுத்தல்..

விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்; தென்காசி எம்எல்ஏ வலியுறுத்தல்..

எழுதியவர்: mohan December 20, 2023, 11:40 am

தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 31 வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் எனவும், தென் தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக உதவி வழங்க வேண்டும் என்றும் எம்எல்ஏ பழனிநாடார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பழனிநாடார் எம்எல்ஏ அளித்துள்ள மனுவில், தென்காசி மாவட்டத்தில் விவசாயம் தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் நெல் பயிர் செய்து வருகிறார்கள். தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெல் பயிர் காப்பீடு செய்யும் தேதி டிசம்பர் 15 தேதி முடிவடைந்து விட்டது. இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் முழுமையாக தங்கள் நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் 17.12.2023 அன்று தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் நெல் பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளது. இதனால் நெல் பயிர்கள் மகசூல் இழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 31 வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் எம்எல்ஏ பழனி நாடார் தெரிவித்துள்ளார்.

மேலும், தென் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை கொட்டி கொட்டித் தீர்த்து தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல குளம், ஏரிகள் நிறைந்து ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சென்று ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. அப்பகுதி மக்கள் அருகில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக தயார் செய்யப்பட்டிருந்த பல ஏக்கர் நாற்றங்கால்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. சென்னையை விட அதிக பாதிப்பு தென் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் கூடுதலாக நிதி உதவி வழங்க வேண்டும் மற்றும் மழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென எம்எல்ஏ பழனிநாடார் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!