17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை கோரிய வழக்கு; பள்ளிக்கல்வித்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு.

பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை கோரிய வழக்கு; பள்ளிக்கல்வித்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு.

எழுதியவர்: mohan June 25, 2021, 6:39 am

பள்ளி செல்லாமல் இடைநின்ற 6 முதல் 18 வயதுடைய குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பை நடத்தி மீண்டும் பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், 4 வாரத்திற்குள் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையை சேர்ந்த முத்துச்செல்வம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால், அரசு பள்ளிகளை பொறுத்தவரை ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுப்பதிலும் பல்வேறு சிக்கல்களை மாணவர்கள் சந்தித்து வருகின்றனர். பல மாணவர்கள் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் செல்லும் சூழல் உள்ளது. பள்ளி செல்லும் வயதுடைய இடைநின்ற குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பு முறையாக பராமரிக்கப்பட வேண்டும். ஆனால், இது தொடர்பாக மத்திய, மாநில கணக்கெடுப்புகளுக்கு இடையே மிகப் பெரும் வேறுபாடுகள் உள்ளது. ஆகவே, அதிகாரிகள் முறையாக கணக்கெடுக்கும் பட்சத்திலேயே உண்மை நிலை குறித்து தெரியவரும். ஆகவே அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் பள்ளி இடைநின்ற 6 முதல் 18 வயதுடைய குழந்தைகள் தொடர்பாக கிராமங்கள், ஊரகப் பகுதிகளில் மத்திய அரசின் வழிகாட்டலின் படி உரிய முறையில் கணக்கெடுப்பை நடத்தக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே மத்திய அரசின் வழிகாட்டலின் படி பள்ளி செல்லாமல் மற்றும் இடைநின்ற 6 முதல் 18 வயதுடைய குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி மற்றும் மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி சிவஞானம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், வழக்கு குறித்து 4 வாரத்திற்குள் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 6 வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!