பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 20 தொகுதியில் போட்டியிட போவதாக ”தேசிய பெண்கள் கட்சி” மதுரையில் அறிவிப்பு. தமிழகத்தில் மதுரை உள்பட 20 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக தேசிய பெண்கள் கட்சி அறிவித்துள்ளது.
இந்தியாவில் முதன் முறையாக பெண்களின் பங்களிப்புடன் கூடிய தேசிய பெண்கள் கட்சி மதுரையில் தொடங்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்வேதா ஷெட்டி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாராளுமன்றத்தில் ஆணுக்கு இணையாக பெண்களும் அமர வேண்டும் என்பதே கட்சியின் முக்கிய குறிக்கோள்.
எங்கள் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் மதுரை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், உள்பட 283 பாராளுமன்ற தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்த உள்ளோம். தமிழகத்தில் மட்டும் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது.
வேட்பாளர் தேர்வில் சமூக ஆர்வலர்களுக்கு முன்னுரிமை தரப்படும். எங்கள் இயக்கத்தின் கொள்கையுடன் ஒத்துப்போகும் ஆண்களையும் வேட்பாளராக நிறுத்த உள்ளோம். எங்களது இயக்கத்துக்கு தேசிய அளவில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியோடு கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை. அந்த கட்சி மாநில அளவில் இயங்கி வரும் கட்சி. அதே நேரத்தில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். இவ்வாறு அவர் கூறினார். மாநில தலைவர் பிக்பாஸ் புகழ் நித்யா,மாவட்ட தலைவர் ஜோதி உடன் இருந்தனர்.


You must be logged in to post a comment.