தமிழகத்தில் கடந்த மாதம் கடைசி வாரத்தில் உருவான காற்றழுத்த தாழ்வான வலுப்பெறுவதிலும், புயலாக மாறுவதிலும் போக்கு காட்டியது. கடைசியில் ஃபெஞ்சல் புயலாக உருவெடுத்து புதுச்சேரி, விழுப்புரம், மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் பெய்த மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்றே காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. இந்த நிலையில், தெற்கு வங்காள விரிகுடாவின் மையப்பகுதியில் இன்று காலை 8.30 மணி அளவில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரையை அடையும். காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் சூறாவளி சுழற்சி கடல்மட்டத்தில் இருந்து 3.1 கி.மீ. வரை நீண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.