தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்புயலுக்கு ‘டிட்வா’ (Ditwah) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் அமுதா, புயலின் நகர்வு மற்றும் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு நிலவப் போகும் மழை பாதிப்புகள் குறித்து விரிவான தகவல்களை வெளியிட்டார்.
“தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்றுப் புயலாக மாறியுள்ளது. இது தற்போது காரைக்காலுக்குத் தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகக் கடற்கரையை நெருங்கும்” என்று தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’
புயல் கரையை நெருங்குவதால் ஏற்படும் கனமழை குறித்துப் பேசிய அவர், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.நவ.28 முதல் 30 வரை டெல்டா மாவட்டங்களில் அதித கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்படுகிறது. இப்பகுதிகளில் 20 செ.மீ-க்கும் அதிகமான மழை பதிவாகக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.டெல்டா மாவட்டங்களைத் தவிர்த்து, வடகடலோர மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆஞ்சு அலர்ட் (Orange Alert)
கடலூர், புதுக்கோட்டை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும்.சென்னையைப் பொறுத்தவரை, நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நகரின் பல இடங்களில் இடைவிடாத கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் இயக்குநர் அமுதா அறிவுறுத்தினார். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அத்தியாவசிய பொருட்களைக் கையிருப்பில் வைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


You must be logged in to post a comment.