தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் நடைபெற்று வரும் ரயில்வே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை புதுமைபடுத்தி புதிய ரயில் நிலையமாக மாற்ற வேண்டும் என்றும் நெல்லை எம்..பி ராபர்ட் புரூஸ் ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை புதுடெல்லியில் நேரில் சந்தித்து நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ் கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் மதுரை-பெங்களூர் வந்தே பாரத் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும். அதனை திருச்சி செல்லாமல் நெல்லையில் இருந்து மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக இயக்க வேண்டும். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை புதுமைப்படுத்தி புதிய ரயில் நிலையமாக மாற்ற வேண்டும். பாவூர்சத்திரம் ரயில்வே பால பணியை விரைந்து முடிக்க வேண்டும். நெல்லை- சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கு கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்க வேண்டும். திருவனந்தபுரம்-மங்களூர் விரைவு ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும், செங்கோட்டை-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை வாரத்திற்கு 3 நாட்கள் இயங்குவதை அனைத்து நாட்களிலும் இயக்க வேண்டும்.
குமரி முதல் ஹவுரா வரை வாரம் ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் ரெயிலை தென் பகுதியில் இருந்து கிழக்கு பகுதிகளுக்கு செல்வதற்காக திருச்சி-ஹவுரா மற்றும் சுரக்பூர்-விழுப்புரம் ரயில்களை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும். நாகர்கோவில்-தாம்பரம் ரயிலை தினமும் இயக்க வேண்டும். நெல்லை-கொல்லம் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். தென் தமிழகத்திற்கு மெமு ரெயில்கள் இயக்கப்பட வேண்டும். மேலும் வசதியாக கூடுதல் பிளாட்பாரங்கள் அமைத்து, அனைத்து நடைமேடைகளிலும் மின்தூக்கி மற்றும் எக்ஸ்லேட்டர்கள் வசதி ஏற்படுத்த வேண்டும். பாளை குலவணிகர்புரம் ரெயில்வே மேம்பாலத்தை ஒய் வடிவில் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மக்களின் முக்கிய கோரிக்கைகளை ராபர்ட் புரூஸ் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.