பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் இரு மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க வந்த ஆசிரியை அரிவாளால் வெட்டிய பள்ளி மாணவனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க இளைஞர் நீதிக்குழுமம் உத்தரவிட்டுள்ளது.
பாளையங்கோட்டையில் எல்ஐசி மண்டல அலுவலகம் உள்ள சாலையில் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகிறாா்கள்.
இந்த பள்ளியில் 8 ஆம் வகுப்பில் பயின்று வரும் மேலப்பாளையத்தைச் சோ்ந்த ஒரு மாணவருக்கும், கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த மாணவருக்கும் செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த மாணவா் தனது புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மேலப்பாளையத்தைச் சோ்ந்த மாணவரை வெட்டியுள்ளார். இதை தடுக்க வந்த ஆசிரியை ரேவதியையும் அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
காயமடைந்த மாணவரையும், ஆசிரியையும் மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
தகவலறிந்ததும், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி, துணை ஆணையா் சாந்தாராம் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.
தகவலறிந்த காயமடைந்த மாணவரின் பெற்றோா், உறவினா்களும் மருத்துவமனையில் குவிந்தனா். இதுதொடர்பாக அவா்கள் கூறுகையில், எங்களது மகனுக்கும், வெட்டிய மாணவருக்கும் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறிய தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்பு எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த நிலையில் பென்சில் பிரச்னையில் வெட்டியதாகக் கூறுகிறாா்கள். எங்களது மகனுக்கு உயா்சிகிச்சை கிடைக்கவும், உயிருக்கு பாதுகாப்பு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், பென்சிலை மாற்றி எடுத்தது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் மாணவரை வெட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவருக்கு மூன்று இடத்தில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. தடுக்க சென்ற ஆசிரியைக்கும் காயம் ஏற்பட்டுள்ளது என கூறினா்.
இதற்கிடையில் மாணவருக்கு அரிவாள் வெட்டு சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதால் சக மாணவா்களின் பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை பாா்க்க பள்ளி முன் குவிந்தனா். பின்னா் மாணவா்கள் பாதுகாப்பாக இருப்பதாக பள்ளி சாா்பில் பெற்றோருக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டது. இந்த சம்பவத்தால் பாளையங்கோட்டையில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையே, சக மாணவனையும் ஆசிரியரையும் அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மாணவனை போலீஸாா், இளஞ்சிறாா் நீதிகுழுமத்தின் முன் ஆஜா்படுத்தி, கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.
இளைஞர் நீதிக்குழுமத்தின் நீதித்துறை நடுவர் தலைமையில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது. இதில் வரும் 29 ஆம் தேதி வரை 14 நாள்கள் அவரை சீர்திருத்த குழுமத்தில் காவலில் வைக்க நடுவர் உத்தரவிட்டார்.
மேலும், தகுதியான நபர்களைக் கொண்டு மாணவனுக்கு ஆலோசனை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.