நெல்லை டவுண் கல்லணை பெண்கள் மேல் நிலைப்பள்ளி அமைந்துள்ள சாலையில் அபாயகரமாக உள்ள கழிவு நீரோடையின் பக்கவாட்டில் தடுப்புச் சுவர் அமைத்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி மாநகராட்சி ஆணையரிடம் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்த மனுவில், நெல்லை டவுண் தெற்கு மவுண்ட் சாலை கல்லணை பெண்கள் மேல் நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.

இந்த பகுதியில் உள்ள கழிவு நீரோடையில் தடுப்புச் சுவர்கள் இல்லாமலும், அச்சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழக்கூடிய அபாய சூழலும், அதனால் காயம் ஏற்படுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. எனவே மாநகராட்சி ஆணையாளர், மேயரின் கவனத்திற்கு கொண்டு சென்று கழிவு நீரோடையின் பக்கவாட்டில் தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு அளிக்கும் நிகழ்வில், மஜக மாநில துணை செயலாளர் அலிஃப் பிலால் ராஜா தலைமையில், மண்டல இளைஞர் அணி அஷ்ரப், மாவட்ட பொருளாளர் முகமது அலி, டவுண் பகுதி மஜக செயலாளர் யாசின், அவைத் தலைவர் மன்சூர், துணை செயலாளர்கள் ஜமால், பக்கீர் மைதீன், இஸ்மாயில் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்