நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் வன விலங்குகளால் விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ள நிலையில், அனைத்து விவசாய பயிர்களுக்குமான காப்பீட்டு செலவை தமிழக அரசே ஏற்று பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில், நெல்லை மாவட்டம் களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள திருப்பரங்குடி, மலையடிப்புதூர், மாவடி, சாலைப் புதூர், ராமகிருஷ்ணா புரம், சிதம்பரா புரம், எஸ்.என். பள்ளிவாசல், மூங்கிலடி, கலுங்கடி, மஞ்சு விளை, பத்தை, புலவன் குடியிருப்பு, பட்டன் காடு, வி.கே.புரம், கடையம் போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஆயிரக் கணக்கான ஏக்கர்களில் நெல் பயிர், வாழை, தென்னை, பனை மற்றும் கடலை, காய்கறிகள் ஆகியவற்றை பயிர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பல இயற்கை பேரிடர்களான வறட்சி, புயல், நோய் போன்றவற்றால் விவசாயம் செய்யும் பயிர்களுக்கு மகசூல் எடுக்க முடியாமல் இப்பகுதி விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது காட்டு யானைகளும், காட்டுப் பன்றிகளும், கரடிகளும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை மரங்கள், நிலக்கடலை உள்ளிட்ட விவசாய பயிர்களை அழித்து விடுகின்றன. எனவே வனக் காவலர்களை விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்து சென்று வன விலங்குகளை விரட்டிட உரிய அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும். மேலும் அனைத்து விவசாயப் பயிர்களுக்கும் அரசாங்கமே முன் வந்து பயிர் காப்பீட்டு செலவினங்களை ஏற்று பயிர் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.