ஒப்பனையின்றி யதார்த்தங்களையே பேசுகின்றன ஹைக்கூ கவிதைகள்; பொருநை இலக்கிய வட்டத்தில் கவிஞர் பேரா பேச்சு..

திருநெல்வேலியில் நடந்த பொருநை இலக்கிய வட்ட நிகழ்வில் பேசிய கவிஞர் பேரா ஒப்பனையின்றி யதார்த்தங்களையே பேசுகின்றன ஹைக்கூ கவிதைகள் எனக் குறிப்பிட்டார். நெல்லையில் பொருநை இலக்கிய வட்டத்தின் 2049-வது வார நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வுக்கு புரவலர் அருணாசல காந்தி தலைமை வகித்தார். மீனாட்சி நாதன் இறைவணக்கம் பாடினார். பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநரும், தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்க அமைப்பாளருமான கவிஞர் பேரா “ஹைக்கூ பூக்கள்” என்ற தலைப்பில் தொடர்ந்து பேசி வரும் நிலையில், இந்நிகழ்வில், கோவில்பட்டியில் நடந்த ஒரு நிகழ்வில் வெளியிடப்பட்ட முண்டாசுக்கவிஞர் பாரதி என்ற தலைப்பிலான இரா. சிவானந்தம் என்பவர் எழுதிய ஹைக்கூ கவிதை நூலிலிருந்தும், நெல்லை கவிஞர் ந.ஜெயபாலனின் “தூறல் நனைத்த சுவடுகள்” என்ற கவிதை நூலிலிருந்தும் சில ஹைக்கூ கவிதைகளைச் சொல்லி பேசினார். அவர் பேசுகையில், “நவீன இலக்கியத்தின் வரவே ஹைக்கூ கவிதைகளாகும். ஒரு செய்தியை அல்லது ஒரு காட்சியைப் போகிற போக்கில் பதிவு செய்திடும் தன்மை ஹைக்கூ கவிதைகளுக்கு உண்டு. நீண்ட கவிதைகளை வாசிக்கையில் உண்டாகும் சலிப்பு இந்த வகையான கவிதைகளை வாசிக்கையில் ஏற்படுவதில்லை. புதியவர்களை கவரும் ஆற்றலும் இக்கவிதைகளுக்கு உள்ளது. கற்பனைகளைக் கடந்து, ஒப்பனையின்றி யதார்த்தங்களையே பேசுகின்றன ஹைக்கூ கவிதைகள்” எனக் குறிப்பிட்டார். நிகழ்வில் முனைவர் கணபதி சுப்பிரமணியன், சு. முத்துசாமி உட்பட பல தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Abubakker Sithik

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!