பஞ்சாபில் காணாமல் போன ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி 13 வருடங்களுக்கு பின்னர் திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணத்தில் மீட்கப்பட்டு பஞ்சாப் மாநில காவல்துறை உதவியுடன் மீண்டும் குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டார். கடந்த 17.09.2024ஆம் தேதி விஜயநாராயணம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வயது முதிர்வாலும், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும், தன்னை குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்க இயலாத நிலையிலும், எவ்வித அடையாள அட்டையும் இல்லாமல் சுற்றித்திரிந்து கொண்டிருந்த நபரை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் பஞ்சாப் மாநிலம், குருதாஷ்பூர், சுந்தர் நகரைச் சேர்ந்த சன்சார்சிங் மகன் கந்தர்வ் சிங் (72) என்பது தெரியவந்தது. பின்னர் நாங்குநேரி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் விஜயநாராணயம் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் பஞ்சாப் மாநில காவல் துறையுடன் இணைந்து மேற்கொண்ட விசாரணையில் அவரது அடையாளம் கண்டறியப்பட்டதுடன் அவர் இந்திய இராணுவத்தில் மேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும், அவர் கடந்த 2011ம் ஆண்டு காணாமல் போனது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையால் அவரது குடும்பத்தினரை கண்டுபிடித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று அவரது மகன்கள் அனில்சிங் மற்றும் சுனில்சிங் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் வந்து காப்பகத்தில் இருந்தவரை அடையாளம் கண்டவுடன், அவர் 13 ஆண்டுகள் கழித்து தன் மகன்களை கண்ட உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் விட்டு கட்டியணைத்தார். இந்நிகழ்வானது விஜயநாராயணம் காவல் நிலைய ஆய்வாளரின் சீரிய முயற்சியால் மட்டுமே சாத்தியமானது. இவ்வழக்கில் திறம்பட செயல்பட்ட விஜயநாராயணம் காவல் நிலைய ஆய்வாளர் நாககுமாரி மற்றும் அவர் தலைமையிலான காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வெகுவாக பாராட்டினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.