பூமியின் பசுமையை பாதுகாக்க பல லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கி பள்ளி குழந்தைகள் சாதனை..

பூமியின் பசுமையை பாதுகாக்கும் விதமாக பல லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கி நெல்லை மற்றும் நாகர்கோவில் பள்ளி குழந்தைகள் சாதனை படைத்துள்ளனர். விதைப்பந்துகள் மூலம் பூமியில் பசுமையை விதைக்கும் பணியை தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பூ. திருமாறன் முன்னெடுத்து வருகிறார். விதைப்பந்துகள் பற்றியும் அதனை தயாரிக்கும் முறைகள் குறித்தும் பள்ளி குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் விதைப்பந்து தயாரிக்கும் பணியில் இணைத்து வருகிறார். அந்த வகையில் சமூக ஆர்வலர் பூ.திருமாறன் வழிகாட்டுதலின் படி, நெல்லை மாவட்டம் வள்ளியூர் வேதிக் வித்யாஷ்ரமம் பள்ளி மற்றும் நாகர்கோவில் ரோஜாவனம் இண்டர்நேஷனல் பள்ளி சிறுவர் சிறுமியர் ஒரே நாளில் 10 லட்சம் விதைகளை கொண்டு விதைப்பந்துகள் தயாரித்து சாதனை புரிந்துள்ளனர். 

விதைப்பந்து தயாரிக்கும் பணியின் போது, குழந்தைகளுக்கான பள்ளி விளையாட்டு மைதானத்தில் களிமண் மற்றும் செம்மண் குவிக்கப்பட்டு தண்ணீர் டிரம்கள் வைக்கப்பட்டிருந்தன. சுமார் 5 லட்சம் மர விதைகளை மாணவ மாணவியர் பெற்றோர் ஏற்பாட்டில் கொண்டு வந்து குவித்தனர். மேலும் 5 லட்சம் விதைகளை இரண்டு பள்ளிகளுமே ஏற்பாடு செய்திருந்தன. ஒரே நேரத்தில் பள்ளி குழந்தைகள் தங்கள் பிஞ்சு கைகளினால் மண்ணைப் பிசைந்து லட்டு போல உருட்டி, ஒரு மண் பந்தில் ஐந்து விதைகளை பொதிந்து ராட்சச வேகத்தில் விதைப்பந்துகளை ஆர்வத்துடன் உருவாக்கினர். ஏற்கனவே வெவ்வேறு பள்ளிகள் மூலம் இதுவரை 28 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்கப்பட்டு பூமியில் வீசப்பட்டுள்ளன. வேம்பு, புளி, சப்போட்டா, சீதா, புங்கை, சுபாபுல், எலுமிச்சை, ஆரஞ்சு, நார்த்தை, இலவம் விதைகள் விதைப்பந்துகளில் வைக்க ஏதுவானது என்கிறார் திருமாறன்.

வள்ளியூர் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி குழந்தைகள் தொடங்கி +2 மாணவர்கள் வரை மிகுந்த ஈடுபாட்டுடன் இந்திய தேசத்தின் பசுமையை பாதுகாக்கும் விதைப்பந்து தயாரிக்கும் பணியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சகாய அனு, நிர்வாக அலுவலர் மகாராஜன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். மாவட்ட கல்வி அதிகாரி தேவிகா, தென்காசி மாவட்ட சமூக நல ஆர்வலர் திருமாறன், வள்ளியூர் பசுமை இயக்கம் சித்திரை உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதேபோன்று, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரோஜாவனம் பள்ளியும் தனது மாணவ மாணவிகளை மைதானத்தில் ஒன்று கூடச் செய்து விதைப்பந்துகளை செய்ய ஊக்குவித்தது. பள்ளித் தலைவர் அருள் கண்ணன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சங்கீதா, ரோஜாவனம் கிளிட்டஸ், சாந்தி, சுஜுன், மகேஷ், சுகுமாரி ஏற்பாடுகளை கவனித்தனர். திருமாறன் விதைப்பந்துகளை உருவாக்கும் பசுமைத்திட்டம் குறித்து விளக்கவுரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் பங்கேற்ற 2,000 மாணவ மாணவிகளுக்கும் சாம்பவர் வடகரை ஹரி பிரியாணி ஹரிஹர செல்வன் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். பல் மருத்துவர்கள் நாகர்கோவில் பெசன்ஜாஸ், முக்கூடல் ஏகலைவன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 38 லட்சம் விதைப்பந்துகளை மாணவர் சக்தி கொண்டு உருவாக்கிய அனைவரையும் சௌமியா விஜி, மதுரை பாலு பாராட்டினர். இதனை தொடர்ந்து விதைப் பந்துகளை ராணுவ ஹெலிகாப்டர்களின் உதவியுடன் பரவலாக விதைக்கும் திட்டம் தீட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!