நெல்லை மாவட்டத்தில் மாணவ சமூகத்தின் எதிர்கால நலனை பாதுகாக்க பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசியல் தலைவர்கள், சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் துணை நிற்பது அவசியம் என மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அலிஃப் பிலால் ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தனியார் பள்ளி மாணவர்களின் சமூக வலைதள பதிவின் காரணமாக ஏற்பட்ட மோதல், மாணவர்களுக்கிடையே பகையை உருவாக்கி இதில் ஒரு தரப்பினர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். வளரும் பிள்ளைகளிடையே வன்முறை போக்குகளும், ஆதிக்க மனநிலையும் உருவாவது ஆரோக்கியமல்ல. சகோதரத்துவமும், சமூக நீதியும் வகுப்பறையில் போதிக்கப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற தேவையை இது போன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இதில் மிகுந்த அக்கறைக் கொண்டு செயல்பட வேண்டும். நாகரீக சமூகத்தில் சாதி-மதங்களை கடந்த நட்பை பேண வேண்டும் என்ற சிந்தனை விதைக்கப்பட வேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் இதற்கு துணை நிற்பது தான் அமைதியான எதிர்காலத்திற்கு உதவும். நெல்லை மாவட்ட மக்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சீரமைக்க வேண்டிய கடமை அரசியல் தலைவர்களுக்கு, சமூக அமைப்பின் தலைவர்களுக்கு என அனைவருக்கும் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் மாணவர்களுக்கு இடையே நிலவும் குறுகிய மனப்பான்மை களையப்பட வேண்டும். மாணவர்களுக்கிடையே ஒழுக்கமும் நன்னெறி பயிற்சி வகுப்புகள் நீதியரசர் சந்துரு அவர்களின் வழிகாட்டல் அறிக்கையை அரசு முன்னெடுக்க வேண்டும் என்பதே வெகுஜன மக்களின் கோரிக்கையும் எதிர்பார்ப்பாகும் என மஜக துணைப் பொதுச்செயலாளர் அலிஃப் பிலால் ராஜா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.