கவிஞர் பேரா எழுதிய “கூழாங்கற்கள்” நூலினை வெளியிட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர்..

கவிஞர் பேரா எழுதிய “கூழாங்கற்கள்” எனும் நூலை தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வெளியிட்டார். நூலின் முதல் படியை நியூஸ் -18 தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ச. கார்த்திகைச் செல்வன் பெற்றுக் கொண்டார். பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநர் கவிஞர் பேரா எழுதிய “கூழாங்கற்கள்” சுயசரிதை நூல் வெளியீட்டு விழா நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. நெல்லையில் கவிஞர் பேரா என அனைவராலும் அன்பாக அழைக்கப்படுவர் கவிஞர் பே.இராஜேந்திரன். நெல்லை பொதிகை தமிழ்ச்சங்க நிறுவுநரும், தமிழ் மொழிப் பற்றாளருமான கவிஞர் பேரா பன்முகத்திறமை மிக்கவர். தனது கவிதைகள் மற்றும் எழுத்துக்கள் மூலம் தமிழ் மொழியின் பெருமையை உலகறிய செய்து வருகிறார்.

கவிஞர் பேரா தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையின் நெல்லை மாவட்ட வருவாய் அலகில் பணியாற்றி பணி நிறைவு செய்தவர். நெல்லை மாவட்டத்தில் பணியாற்றிய அலுவலகங்களில் தனது அனுபவங்களைத் தொகுத்து “கூழாங்கற்கள்” எனும் தலைப்பில் எழுதிய இந்த கவிதை நூலை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையேற்று வெளியிட்டார். நூலின் முதல் படியை நியூஸ்-18 தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ச. கார்த்திகைச் செல்வன் பெற்றுக் கொண்டார். முன்னதாக நூலாசிரியர் கவிஞர் பேரா வரவேற்புரை ஆற்றினார். நூலாசிரியர் பற்றிய அறிமுகத்தினை தீபிகா வழங்கினார். தொடர்ந்து பேராசிரியர் சௌந்தர மகாதேவன் வாழ்த்துரை வழங்கினார்.

நிறைவாக நிகழ்ச்சியில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், பாளையங்கோட்டை சிறைவாசிகளின் வாசிப்பிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள நூலகம், பாளையங்கோட்டை தூய இஞ்ஞாசியார் கல்வியல் கல்லூரி நூலகம் உட்பட பல நூலகங்களுக்கு புரவலர்கள் சார்பாக நூல்கள் தானமாக வழங்கப்பட்டது. இந்த நூல்களை சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வழங்கினார். விழாவில் இராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் மி.ஜோசப் பெப்சி, களக்காடு இராஜன், முனைவர் இராஜ.மதிவாணன், கவிஞர் பாமணி, வத்தலக்குண்டு வதிலை பிரபா, எழுத்தாளர் தேனி மு.சுப்பிரமணி, தூத்துக்குடி அன்பழகன், வழக்கறிஞர் சுதர்சன், வட்டாட்சியர்கள் பெமினா ரேச்சல், இராஜேஸ்வரி, வெங்கட்ராமன், செல்வன், ஆதி நாராயணன், மைதீன் பட்டாணி, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் மோகன், திண்டுக்கல் அ.ஷாஜகான், காந்தி கிராம பல்கலைக்கழக பேராசிரியர் சிதம்பரம் உட்பட தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் நூல் பிரியர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

இந்த நூல் குறித்து நூலாசிரியர் கவிஞர் பேரா கூறியதாவது, “2020-ஆம் ஆண்டு கொரோனா கொடிய நோய் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் இந்த நூலை எழுதத் தொடங்கினேன். இடையில் சில காரணங்களால் தடைபட்ட நூல் தற்போது முழு அளவில் வெளியாகி இருக்கிறது. வருவாய்த் துறையின் பெருமைகளை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறேன். மேலும் துறையின் பணிகளையும் எழுதியிருக்கிறேன். நான் பணியாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முதல் பல வட்டாட்சியர் அலுவலகங்களில் எனது அனுபவங்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறேன். இன்றைய தென்காசி மாவட்டமும் இணைந்த ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் பல அலுவலகங்களிலும் பணியாற்றியபோது எனக்கு ஏற்பட்ட சந்தோசமான தருணங்களை, நிகழ்வுகளை எழுதியிருக்கிறேன். இந்த நூலை வாசிக்கையில், ஒரு நாவலை வாசித்த அனுபவம் வாசித்தவர்களுக்குக் கிடைக்கும்” என கவிஞர் பேரா கூறினார்.

செய்தியாளர்- அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!