கோ-ஆப்டெக்ஸ் திபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்த நெல்லை மாவட்ட கலெக்டர்..

திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள கோ- ஆப்டெக்ஸ் காந்திமதி விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், 21.09.2024 அன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.

காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளைக் கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழ்நாடு அரசு வழங்கும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. 

இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு புடவைகள் திருப்புவனம் பட்டு சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள் பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜங்ஷன் காந்திமதி விற்பனை நிலையம், சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை பொருநை விற்பனை நிலையம், கீழ ரத வீதி டவுண் செந்தில் விற்பனை நிலையம், வடக்கு ரத வீதி டவுண் பட்டு மாளிகை விற்பனை நிலையம், பாளையங்கோட்டை விற்பனை நிலையம் ஆகிய 5 கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் உள்ளன. கடந்த தீபாவளி 2023ஆம் ஆண்டு பண்டிகை காலத்தில், திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள 13 விற்பனை நிலையங்கள் சேர்த்து ரூ.9.50 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இந்த வருடம் ரூ.12 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு மட்டும் ரூ.5 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் “கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்” என்ற சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளர்கள் செலுத்தினால் 12வது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் பி.ஆரோக்கியராஜ், கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் நா.இராஜேஷ்குமார், விற்பனை நிலைய மேலாளர் எஸ்.கணபதி, அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!