திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியில் தமிழ்த் துறை மற்றும் ஆய்வு மையம் சார்பாக “இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு” என்னும் தலைப்பில் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. பயிற்சி பட்டறை தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் உஷா காட்வின் தலைமை தாங்கினார். தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் சா. தேவநேசம் மேபல் வரவேற்புரை ஆற்றினார். முன்னதாக முனைவர் ஜா. சாந்தி பாய் இறை வார்த்தையும், முனைவர் பா.ஹெலன் சோபியா ஐயன் உரையும் வழங்கினர்.

அடுத்ததாக பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநர் கவிஞர் பேரா வாழ்த்துரை வழங்கினார். வாழ்த்துரையில், “தமிழ் மொழியின் சிறப்பினை மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு மாணவிகள் பணியாற்ற வேண்டும். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருவதை மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும். இத்துறை மாணவ மாணவிகளுக்காக நடத்திவரும் போட்டிகளில் பங்கேற்று பயன் பெற வேண்டும் என கவிஞர் பேரா கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் தேனி சுப்பிரமணி இணையத்தில் தமிழ் பயன்பாடு என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். அப்போது அவர், “இணையத்தைத் தொடர்ந்து புதிய தொழில் நுட்பமாக செயற்கை நுண்ணறிவு வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கு இணையத்தில் உள்ள தகவல்களே தரவுகளாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இணையத்தில் இடம் பெற்றிருக்கும் தமிழ் உள்ளடக்கங்கள் குறைவாக உள்ளதால் தமிழ்ப் பயன்பாடும் குறைவாக உள்ளது. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்களை அதிகரிக்க மாணவர்கள் முன் வர வேண்டும்” என்றார்.
இப்பயிற்சி பட்டறையில் முன்னதாக முனைவர் ப. அலிஸ் ராணி இறை வணக்கம் பாடினார். இந்நிகழ்வினை முனைவர் இரா. செல்வ ஸ்ரீ தொகுத்து வழங்கினார். முடிவில் பேராசிரியர் ஜே. சூசன் எழில் மலர் நன்றியுரை வழங்கினார். பயிற்சிப் பட்டறையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.