நெல்லையில் இந்தோ-தைமூர் சிறப்பு விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் தைமூர் நாட்டின் துணை பிரதமர் மரியானோ அசானமி சாபினோ பங்கேற்று, தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தின் இராமகிருஷ்ணன் உள்ளிட்ட 100 சாதனையாளர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கினார்.



தமிழ்நாடு, புதுவை மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 100 சாதனையாளர்களுக்கு சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி நெல்லை ஸ்ரீராம் கிராண்ட் இன் ஹோட்டலில் திங்கள் கிழமையன்று நடைபெற்றது. இந்த விருது நிகழ்ச்சியில் தைமூர் நாட்டின் துணை பிரதமர் மரியானோ அசானமி சாபினோ கலந்து கொண்டு பல்வேறு துறை, பணி, கலை, சாதனை, சிறப்புமிக்கவர்களுக்கு விருதுகளை வழங்கினார். சிறந்த நூறு நபர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கு பீஸ் பல்கலைக்கழக இந்திய ஆலோசகர் ஐசக் பாஸ்கர் தலைமை தாங்கினார். காமன்வெல்த் மெடிக்கல் அசோசியேஷன் தலைவர் டாக்டர். ஜெயலால், முன்னாள் துணைவேந்தர் டாக்டர். ஆபிரகாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தைமூர் நாட்டு துணை பிரதமர் மனைவி கேண்டிடா சீமன்ஸ் வியரியா நமது பாரம்பரியப்படி குத்து விளக்கேற்றினார். சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
தைமூர் நாட்டு பீஸ் பல்கலைக்கழகத்தின் இந்திய இயக்குனர் டாக்டர். ஐசலின் பாஸ்கர் துவக்க உரையாற்றினார். விழாவில் தைமூர் துணை பிரதமர் மரியானோ அசானமி சாபினோ ஆங்கிலத்தில் சிறப்புரை ஆற்றினார். அதன் தமிழாக்கத்தை சுருக்கமாக டாக்டர். ஐசக் பாஸ்கர் தமிழில் மொழி பெயர்த்தார். விழாவில் கலந்து கொண்டவர்களை “உன்பாஸ்” பல்கலைக்கழக இந்திய இயக்குனர் டாக்டர். ராஜா தங்கப்பன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். துணை பிரதமர் மனைவிக்கு சாந்தி திருமாறன் பொன்னாடை அணிவித்தார்.
இந்நிகழ்வில், இந்தியா தைமூர் ஆகிய இருநாடுகளின் உறவு மற்றும் கல்வி மேம்பாடு சிறப்படையும் வகையில் மாணவர்கள், டாக்டர்கள், ஆசிரியர்கள், காந்தியவாதிகள் மற்றும் சாதனையாளர்கள் சந்தித்து உரையாடினர். தமிழர்களின் பாரம்பரியத்தை அண்டை நாட்டினர் அறிந்து கொள்ளும் வகையில் சிலம்பம், தவில், நாதஸ்வரம் நிகழ்ச்சியும் நடந்தது. முன்னதாக பாளையில் திமோர் துணை பிரதமர் பாளை இக்னேஷியஸ் பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியை வசந்திமேரி பிருந்தா, ஐசக் பாஸ்கர், டாக்டர் ஏகலைவன் மற்றும் திருமாறன் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.