நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் என்ற பெயரில் கட்டாய வசூல்; மஜக துணைச் செயலாளர் குற்றச்சாட்டு..

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் வசூல் என்ற பெயரில் குத்தகைதாரர்கள் சிறார்கள் மூலம் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருவதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் அலிஃப் பிலால் ராஜா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் குத்தகைதாரர்கள், ரயில்வே நிலையத்திற்கு பயணிகளை வழியனுப்பவும், அழைத்துச் செல்லவும் வருபவர்களிடம் கட்டாய பார்க்கிங் கட்டணம் வசூலிக்கின்றனர். வாகனங்களை ரயில்வே பார்க்கிங் வளாகத்தில் நிறுத்தும் வாகனத்தில் மட்டும் தான் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய வேண்டும். ஆனால் ரயில்வே நிலையத்திற்கு செல்லக்கூடிய சாலையில் இடையில் மறித்துக்கொண்டு வரக்கூடிய வாகனங்களில் குத்தகைதாரர்களுடைய ஆட்கள் கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர்.

பார்க் செய்யவில்லை உடனே சென்று விடுவோம் என்று கூறுபவர்களிடமும், தொடர் சச்சரவுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடுமோ என்ற கவலையும் உருவாகி உள்ளது. இது மட்டுமல்லாது நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தின் முன் நுழைவாயிலில் உள்ள இருசக்கர வாகன காப்பகத்தின் அருகில் வாகனங்களை பார்க் செய்பவர்களிடமும் கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர். (அது கட்டண பார்க்கிங்க்கு ஆன இடமில்லை). கடந்த வாரத்தில் பத்திரிகையாளர் ஒருவர் இவர்களுடைய அடாவடி பேச்சினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே வரம்பு மீறி கட்டாய வசூலில் ஈடுபடும் குத்தகைதாரரின் ஒப்பந்தத்தை நிர்வாகம் ரத்து செய்வதுடன், இப்பிரச்சனைக்கு ரயில்வே அதிகாரிகள் விரைந்து தீர்வு காண வேண்டும் என அலிஃப் பிலால் ராஜா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!