எதிர்மறைச் சிந்தனைகளைக் கடந்து நேர்மறைச் சிந்தனையோடு வாக்களிக்க வேண்டும்; கவிஞர் பேரா பேச்சு..

நாடாளுமன்ற தேர்தலில் எதிர்மறைச் சிந்தனைகளைக் கடந்து நேர்மறைச் சிந்தனையோடு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என நெல்லை இலக்கிய விழாவில் கவிஞர் பேரா பேசினார். நெல்லையில் 07.04.2024 அன்று பொருநை இலக்கிய வட்டத்தின் 2059-ஆவது வார நிகழ்வு நடந்தது. இலக்கிய ஆர்வலர் நசீர் தலைமை வகித்தார். மீனாட்சிநாதன் இறைவணக்கம் பாடினார். பொருநை இலக்கிய வட்ட இளைய புரவலர் தளவாய் இரா.திருமலையப்பன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் கோதைமாறன், சண்முகசுந்தரம், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் அய்யாக்குட்டி, முத்துகுமாரசாமி ஆகியோர் பேசினர்.

தொடர்ந்து பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநர் கவிஞர் பேரா பேசினார். அவர் பேசுகையில் “நடக்க இருக்கும் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். எதிர்மறைச் சிந்தனைகளைக் கடந்து நேர்மறைச் சிந்தனையோடு வாக்களிக்க வேண்டும். படித்தவர்கள் மத்தியில் வாக்களிக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது. கடந்த காலங்களில் இவர்களின் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாகவே இருப்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். இந்த நிலை வருத்தமாக இருக்கிறது. அதுபோல கிராம மக்களை விட நகர மக்களின் வாக்குப் பதிவும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக நகரங்களின் விரிவாக்கப் பகுதியில் வாக்குப் பதிவு குறைவாகவே இருக்கிறது. இந்நிலை மாறிட அனைவரும் வாக்களிப்போம். வாக்களிக்க வைப்போம் என்று பேசினார். நிகழ்ச்சியில் 80-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் கோதை மாறனுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. கவிஞர் பாமணி நன்றி கூறினார். நிகழ்வில் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!