நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பன்னாட்டு இலக்கிய கருத்தரங்கம்
நெல்லை அரசு அருங்காட்சியகமும், கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையும் இணைந்து உலக தாய்மொழி நாள் விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் விதமாக தாய் தமிழும் தமிழர் பண்பாடும் என்கிற பன்னாட்டு இலக்கிய கருத்தரங்கினை நடத்தினர். இந்நிகழ்வில் தொடக்க விழாவில் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் பிரியதர்ஷினி வரவேற்புரை ஆற்றினார். அகவை முதிர்ந்த தமிழறிஞர் சங்கத்தின் மாநில தலைவர் கவிஞர் சுப்பையா தமிழ் மொழி குறித்து வாழ்த்து பாடலை பாடினார். நெல்லை அரசு அருங்காட்சியகத்தின் மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி தலைமையுரை ஆற்றினார். அவரது உரையில் மொழிக்கு எல்லாம் தாய் மொழியாம் நம் தமிழ் மொழியினையும் உலகின் தலைசிறந்த பண்பாடாம் தமிழர் பண்பாட்டினையும், இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரிவிப்பதே இந்த பன்னாட்டு இலக்கிய கருத்தரங்கின் மிக முக்கியமான நோக்கம் என்று உரைத்தார்.
தொடர்ந்து தமிழக அரசின் உ வே சா விருத்தாளர் எழுத்தாளர் நாறும்பூநாதன், தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளர் விருது பெற்ற கவிஞர் சிவசெல்வ மாரிமுத்து ஆகியோரை பாராட்டும் விதமாக நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து வாழ்த்துரை நிகழ்த்தினார்கள். நிகழ்வில் திருவருள் லத்தீப் வாழ்த்துரையை தொடர்ந்து பன்னாட்டு கலைச்செம்மல் முனைவர் முகமது முகைதீன் தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் கருத்தரங்க சிறப்புரையினை வழங்கினார். அவரது உரையில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ் மொழியின் மூலமாகவும், தமிழர் பண்பாட்டின் மூலமாகவும் இணைந்து பண்பட்டதோர் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அதை வெளிப்படுத்தும் விதமாக இந்த இலக்கிய கருத்தரங்கம் நடைபெறுகின்றது என்றுரைத்தார்.
தொடர்ந்து சதக்கத்துல்லா அப்பா கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் பொன் சக்தி கலா நன்றி உரை ஆற்றினார். முதல் அமர்வு இலக்கிய அமர்வாக நடத்தப்பட்டது. அந்த அமர்விற்கு ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் ஜெயமேரி தலைமை ஏற்றிருந்தார். தொல்லியல் நோக்கில் தமிழர்கள் என்கிற தலைப்பில் முனைவர் அனுசியா (தமிழ் துறை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி) சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து சங்கத்தமிழர் வாழ்வியல் என்கிற தலைப்பில் நாகர்கோயில் தெ.தி இந்து கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் சொர்ணபமீலா சிறப்புரை ஆற்றினார்.
இரண்டாம் அமர்வு பண்பாட்டு அமர்வாக நடத்தப்பட்டது. இந்த அமர்வில் தூத்துக்குடி போப் கல்லூரி தமிழ் துறை தலைவர் முனைவர் ஹன்னா லில்லி தலைமை வகித்தார். திருநெல்வேலி தட்சிணமாற நாடார் சங்க கல்லூரி தமிழ் துறை தலைவர் கிரிஜா தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து தென்காசி ஜேபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் ராஜன் ஜான் தமிழர் பண்பாட்டில் காதலும் கற்பும் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









