நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட கழிவுகள்! சர்ச்சைக்கு உள்ளான நிலையில் மீண்டும் கேரளாவுக்கே எடுத்துச் செல்லும் அதிகாரிகள்..

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் மீண்டும் கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.

கேரளத்திற்கு 16 லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது, இதனால் கேரள எல்லை வரை தமிழக அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூா், பழவூா், கொண்டாநகரம் சுற்று வட்டாரங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூன்று நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

இதனிடையே நடுக்கல்லூா் உள்ளிட்ட நான்கு இடங்களிலும் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் மற்றும் தனியாா் மருத்துவமனை கழிவுகள் தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கான மருந்து குப்பிகள், ஊசிகள், ரத்த மாதிரிகள், ஆவணங்களை திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சேகரித்து பசுமைத் தீா்ப்பாயத்திடம் ஒப்படைத்தது.

அதைத் தொடா்ந்து பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவுப்படி கேரள மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைமைப் பொறியாளா் பின்சி அகமது, சுகாதாரத் துறை அதிகாரி கோபுகுமாா் ஆகியோா் தலைமையில் திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலா்கள், மருத்துவக் கழிவுகளை அகற்றும் அமைப்பினா் உள்பட 8 போ் கொண்ட குழு திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட நடுக்கல்லூா், கொண்டாநகரம், பழவூா், இலந்தைக்குளம், சிவஞானபுரம் உள்பட 7 இடங்களிலும் நேரில் ஆய்வு செய்தனா்.

அவா்களும், மருத்துவக் கழிவுகளின் மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்து கொண்டனா்.

இந்த நிலையில், இன்று மீண்டும் கேரளத்தில் இருந்து 25 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வந்துள்ளனர்.

கேரள அதிகாரிகள் ஆய்வு செய்த இடத்தில் இருந்து குப்பைகளை அகற்றும் பணி தொடங்கவுள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!