நெல்லை அரசு அருங்காட்சியக கண்காட்சியில் சிக்கிமுக்கி கல்..

நெல்லை அரசு அருங்காட்சியக சிறப்பு கண்காட்சியில் காணி பழங்குடி இன மக்கள் பயன்படுத்திய சிக்கி முக்கி கல் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லை பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். பார்வையிட வருபவர்களிடம் சிக்கிமுக்கி கல் குறித்தும், அதனை பயன்படுத்திய பழங்குடி இன மக்கள் மற்றும் அவர்களின் வரலாறு குறித்தும் காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி விளக்கி கூறி வருகிறார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் டிசம்பர் மாத சிறப்பு காட்சி பொருள் கண்காட்சி டிச.4 ஆம் தேதி சனிக்கிழமை துவங்கியது. இக்கண்காட்சியில் காணி பழங்குடி மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சிக்கிமுக்கி கல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி கூறியுள்ளதாவது: சிக்கி முக்கிக் கல் நெருப்பு உண்டாக்கும் கல்லாக உள்ளது. சிக்கிமுக்கிக் கல் சிலிக்காவினால் ஆன ஒருவகை படிவுப் பாறை ஆகும். இக்கல்லானது கடினமான, படிகவடிவு வெளித்தெரியாத (cryptocrystalline) கனிம படிகக்கல்லின் (mineral quartz) படிவு வடிவமாகும். பழைய கற்காலத்தில் மனிதன் சிக்கி முக்கி கற்களை உராய்வதனால் நெருப்பை கண்டுபிடித்தான். அதை வைத்து விலங்குகளை பயமுறுத்தினான். உணவு சமைத்தான். இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சிக்கிமுக்கி கல் காணி பழங்குடியினரிடம் இருந்து சேகரிக்கப் பட்டது. டிச.4 சனிக்கிழமை துவங்கப்பட்ட இக்கண்காட்சி இந்த மாதம் முழுவதும் நடைபெறுகிறது. கண்காட்சியை பொதுமக்கள் மாணவ-மாணவிகள் என அனைவரும் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர் என்று காப்பாட்சியர் கூறியுள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!