தென்காசி கலெக்டர் தலைமையில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு..

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதி மொழியை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடவேண்டும் என அறிவித்ததை தொடர்ந்து 17.09.21 வெள்ளிக் கிழமை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் தலைமையில், அனைத்து அரசு அலுவலர்களும் சமூக நீதி நாள் உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டார்கள். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும், எனது வாழ்வியல் வழி முறையாகக் கடைபிடிப்பேன், சுயமரியாதை ஆளுமைத்திறனும், பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்,சமத்துவம் சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன். மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்”. என்ற உறுதி மொழியின் வாசகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனி சௌந்தர்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!